மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்


மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 5 Nov 2017 3:45 AM IST (Updated: 5 Nov 2017 11:52 PM IST)
t-max-icont-min-icon

தண்டையார்பேட்டை பகுதியில் 2 இடங்களில் மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராயபுரம்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தண்டையார்பேட்டை கருணாநிதி நகர், சாஸ்திரி நகர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்தது.

தற்போது மழை பெய்யாவிட்டாலும் தெருக்களில் தேங்கிய மழைநீர் வடியாமல் அப்படியே நிற்கிறது. மேலும் கடந்த 2 நாட்களாக மின்சார வினியோகமும் நிறுத்தப்பட்டு உள்ளது. தெருவில் தேங்கி நிற்கும் மழைநீருடன் சாக்கடைநீரும் கலப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

எனவே தெருவில் தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக அகற்றக்கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், மழைநீரை அகற்றக்கோரி நேற்று காலை தண்டையார்பேட்டை–எண்ணூர் நெடுஞ்சாலை 2–வது பாலம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் ஆர்.கே.நகர் போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோல் தண்டையார்பேட்டை நேருநகர், துர்காதேவி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி வீடுகளை சூழ்ந்து உள்ளது.

இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று தண்டையார்பேட்டை–எண்ணூர் நெடுஞ்சாலையில் வைத்தியநாதன் மேம்பாலம் அருகே கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை ஆர்.கே.நகர் போலீசார் சமரசம் செய்து கலைந்து போக செய்தனர்.


Next Story