மழை வெள்ளத்துக்கு பயந்து, வீட்டை பூட்டி சென்றவர் வீட்டில் நகை கொள்ளை


மழை வெள்ளத்துக்கு பயந்து, வீட்டை பூட்டி சென்றவர் வீட்டில் நகை கொள்ளை
x
தினத்தந்தி 7 Nov 2017 3:15 AM IST (Updated: 7 Nov 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் அருகே மழை நீருக்கு அஞ்சி பூட்டி போடப்பட்டு இருந்த வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரம்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. குறிப்பாக தாம்பரம் மற்றும் அதன் அருகே முடிச்சூர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து மழைநீர் வெளியேறி முடிச்சூர், கிருஷ்ணா நகர், அன்னை அஞ்சுகம் நகர், பெருங்களத்தூர், வரதராஜபுரம், அமுதம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் புகுந்துள்ளது.

இந்த மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டதால் அப்பகுதிகளில் இருந்த பெரும்பாலான பொதுமக்கள் அவர்களது வீட்டை பூட்டிவிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு சென்றனர். இதைப்போல முடிச்சூர், லட்சுமிபுரம், சந்தன லட்சுமி தெருவை சேர்ந்த மீனாட்சி (வயது 45) என்பவரும், தனது வீட்டை பூட்டிவிட்டு மாங்காட்டில் உள்ள தனது மகள் வீட்டிற்கு கடந்த 1–ந் தேதி சென்றார்.

பின்னர் மழை குறைந்ததை தொடர்ந்து நேற்று தனது வீட்டிற்கு திரும்பினார். வீட்டில் வந்து பார்த்தபோது அதன் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனாட்சி உடனே உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் 15 பவுன் நகை ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட மர்ம நபர்கள், கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றதாக தெரிகிறது.

இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசில் மீனாட்சி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

மழைநீருக்கு அஞ்சி வீட்டை பூட்டிச்சென்ற போது நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story