மத்திய அரசை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்; காங்கிரசார் ஊர்வலம்
மத்திய அரசை கண்டித்து விருதுநகரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஊர்வலம் சென்றனர்.
விருதுநகர்,
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி உயர் மதிப்புமிக்க ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அத்துடன் புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டு நிலைமை சரிசெய்யப்பட்டது. இந்தநிலையில் நவம்பர் 8–ந்தேதியை கருப்பு பண எதிர்ப்பு தினம் என்று பா.ஜ.க. சார்பில் அனுசரிக்கப்பது என்றும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கருப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டில் பொருளாதார இழப்பு மற்றும் தொழில் முடக்கம் செய்ததாக மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி விருதுநகர் தேசபந்து திடலில் விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் ராஜபாளையம் தங்கபாண்டியன், விருதுநகர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்தஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.
இதேபோல் மத்திய அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு ஆகியுள்ள நிலையில் அதனால் பாதிப்பு ஏற்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து விருதுநகரில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர் தலைமையில் காங்கிரசார் கண்டன ஊர்வலம் நடத்தினர். விருதுநகர் காமராஜர் வித்யாசாலை முன்பு இருந்து புறப்பட்ட ஊர்வலம், காங்கிரசார் நகராட்சி அலுவலகம் சென்று முடிவடைந்தது. பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.