மத்திய அரசை கண்டித்து தி.மு.க.–காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பெருந்துறை தெற்கு மற்றும் வடக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்றது.
பெருந்துறை
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பெருந்துறை தெற்கு மற்றும் வடக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் பெருந்துறை பஸ் நிலையத்தில் நேற்று இரவு 8.15 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். பெருந்துறை வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆண்டமுத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
நிகழ்ச்சியில் உயிரிழந்த பொதுமக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராவுத்தர்குமார், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர். ஆர்.எம்.பழனிசாமி உள்பட 20–க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கொடுமுடி
இதேபோல் கொடுமுடியில் கொடுமுடி வட்டார காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பாபு உள்பட 50–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.