ரூபாய் நோட்டு ரத்து திட்டத்தின் வெற்றியை காங்கிரஸ் கட்சியால் சகித்துக்கொள்ள முடியவில்லை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேட்டி


ரூபாய் நோட்டு ரத்து திட்டத்தின் வெற்றியை காங்கிரஸ் கட்சியால் சகித்துக்கொள்ள முடியவில்லை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேட்டி
x
தினத்தந்தி 9 Nov 2017 4:33 AM IST (Updated: 9 Nov 2017 11:23 AM IST)
t-max-icont-min-icon

ரூபாய் நோட்டு ரத்து திட்டத்தின் வெற்றியை காங்கிரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

பெங்களூரு, 

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வதந்திகளை நம்பக்கூடாது

கடந்த ஆண்டு(2016) இதே நாள்(அதாவது நேற்று) ரூபாய் நோட்டு ரத்து திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இது வரலாற்று சிறப்பு மிக்க திட்டம் ஆகும். நாட்டு மக்கள் இதை ஏற்றுக்கொண்டனர். அனைவரும் நேர்மையாக வாழ்க்கையை நடத்துங்கள் என்பது தான் மோடி கூறும் அறிவுரை. ரூபாய் நோட்டு ரத்து திட்டத்தை காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் குறை கூறுகின்றன. மக்கள் யாரும் வதந்திகளை நம்பக்கூடாது. நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

காங்கிரஸ் கட்சி கருப்பு தினத்தை அனுசரிப்பது சரியல்ல. இது தான் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே இருக்கும் கலாசாரம். காங்கிரஸ் என்றால் ஊழல். கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு ஆதரவு அளிக்கும் காங்கிரஸ் கட்சி தார்மீக ரீதியாக திவாலாகிவிட்டது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இருந்த காங்கிரசுக்கும், இப்போது இருக்கும் காங்கிரசுக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது.

சமரசம் செய்துகொள்ளாது

காங்கிரசை நாட்டு மக்கள் முழுமையாக நிராகரித்த பிறகும் இன்னும் தவறை உணராமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. ஊழல், கருப்பு பணத்தில் பா.ஜனதா எப்போதும் சமரசம் செய்துகொள்ளாது. சில பிரச்சினைகளுக்கு இடையே ரூபாய் நோட்டு ரத்து திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதை காங்கிரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் பொய் குற்றச்சாட்டுகளை அந்த கட்சி கூறுகிறது. இதை நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள்.

ஊழல் ஒழிப்பு பற்றி பேச காங்கிரசுக்கு தகுதி இல்லை. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2-ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி முறைகேடு உள்பட பல்வேறு ஊழல்கள் நடந்தன. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரி துறையை நிர்வகித்தபோதே அதில் ஊழல் நடைபெற்றது. இவர் ரூபாய் நோட்டு ரத்தை குறை கூறி பேசுவது வேடிக்கையாக உள்ளது.

வரி சலுகை வழங்குவது...

ரூபாய் நோட்டு ரத்துக்கு பிறகு நாட்டில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பினாமி சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 37 ஆயிரம் ‘ஷெல்‘ நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கு பிறகு 23 கோடி கடன் அட்டை(கிரெடிட் கார்டு) கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. வங்கிகளில் புதிதாக தொடங்கப்பட்ட கணக்குகளில் ரூ.65 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

வருங்கால வைப்புநிதி திட்டத்தில் புதிதாக 1 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் மற்றும் வணிக பரிமாற்றம் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு வரி சலுகை வழங்குவது குறித்து அடுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்படும். சரக்கு-சேவை வரி திட்டத்தை நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. இதில் காங்கிரஸ் மாநிலங்களும் அடங்கும். ஆனால் இப்போது காங்கிரஸ் கட்சி அதை எதிர்க்கிறது.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார். 

Next Story