வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் 2 பேர் கைது

ஊத்துக்குளி மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 31½ பவுன்நகை மற்றும் சொகுசு கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊத்துக்குளி,
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கெங்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 38). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் 14–ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். அப்போது மர்ம ஆசாமிகள் பூட்டியிருந்த இவருடைய வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த 8½ பவுன்நகையை திருடிச்சென்று விட்டனர். அதுபோல் வெள்ளகோவிலில் கடந்த மாதம் 17–ந்தேதி ஒரு வீட்டின் கதவை உடைத்து அந்தவீட்டில் இருந்த 23 பவுன்நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்று விட்டனர்.
இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக ஊத்துக்குளி மற்றும் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா உத்தரவின்பேரில் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி மேற்பார்வையில் ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு பெரியசாமி மற்றும் போலீசார் முத்துக்குமார், செந்தில்குமார், கார்த்திக் ஆகியோர் கொண்ட தனிப்பே படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நேற்று ஊத்துக்குளி அருகே காங்கேயம் சாலை நோய்யல் ஆற்றுப்பாலத்தில் வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது அந்த வழியாக ஒரு சொகுசு கார் வந்தது. அந்த காரை தனிப்படை போலீசார் நிறுத்தி காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து போலீஸ் நிலையத்திற்கு காருடன் அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஒருவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் படியூரை அடுத்த ரங்கம்பாளையத்தை சேர்ந்த மலைச்சாமி (வயது 53) என்பதும், மற்றொருவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வீனஸ் என்கிற வர்கீஸ் (50) என்றுபதும் தெரியவந்தது.
இவர்கள் 2 பேரும் கெங்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்று இருப்பதும், வெள்ளகோவிலில் உள்ள ஒரு வீட்டின் கதவு பூட்டை உடைத்து அங்கிருந்து நகையை திருடி சென்றதாகவும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து போலீசார் இவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 31½ பவுன்நகையையும், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும், ஊத்துக்குளி மற்றும் கரட்டாங்காடு பகுதிகளில் டாஸ்மாக் பார் எடுத்து நடத்தி வந்தது தெரியவந்தது.
ஊத்துக்குளி மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகையை திருடிச்சென்ற வழக்கில் பார் உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.