மும்பையில் மோனோ ரெயில் தீப்பிடித்து எரிந்தது பயணிகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
மும்பையில் மோனோ ரெயில் தீப்பிடித்து எரிந்தது. ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மும்பை,
இந்தியாவிலேயே மும்பையில் மட்டும் தான் மோனோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது செம்பூர் – வடலா இடையே அதிகாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை மோனோ ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. மோனோ ரெயிலில் தினமும் சுமார் 20 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 5.15 மணியளவில் வடலாவில் இருந்து செம்பூருக்கு காலி மோனோ ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. மைசூர் காலனி மோனோ ரெயில்நிலையம் அருகே வந்த போது ரெயிலின் கடைசி பெட்டிக்கு முந்தின பெட்டியில் இருந்து புகை வந்தது. உடனடியாக மோட்டார்மேன் ரெயிலை நிறுத்தினார். மேலும் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் 3 வாகனங்களில் விரைந்து வந்தனர். அதற்குள் மளமளவென தீ அருகில் உள்ள பெட்டிக்கும் பரவியது. இந்தநிலையில் மோனோ ரெயில்நிலையம் வந்தடைந்த தீயணைப்பு வீரர்கள் ரெயில் வழித்தட மின் இணைப்பை முதலில் துண்டித்தனர். பின்னர் போராடி தீயை அணைத்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் மோனோ ரெயிலின் கடைசி 2 பெட்டிகள் எரிந்து நாசமாகின. பெட்டியில் இருந்த இருக்கைகள், மேற்கூறை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து 2 பெட்டிகளும் எலும்பு கூடாக மாறின.
தீ விபத்து ஏற்பட்ட போது ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து மும்பை பெருநகர வளர்ச்சிக்குழும (எம்.எம்.ஆர்.டி.ஏ.) இணை திட்ட இயக்குனர் திலீப் கவாத்கர் கூறும்போது:–
வழக்கமான சேவை தொடங்குவதற்கு முன் மைசூர்காலனி ரெயில்நிலையத்தில் வைத்து ஒரு பெட்டியில் தீப்பிடித்து உள்ளது. இந்த விபத்தில் 2 பெட்டிகள் சேதமடைந்துள்ளன. 6 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.
இந்த சம்பவம்குறித்து எம்.எம்.ஆர்.டி.ஏ. கமிஷனர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தகவல் அறிந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்தது தெரியவந்தது. மும்பையில் மோனோ ரெயில்சேவை தொடங்கிய நாள் முதல் இதுபோன்ற விபத்துகளை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு 2 மோனோ ரெயில்கள் ஒரே தடத்தில் எதிரெதிரே மோதுவது போல வந்தன. எனினும் மோட்டார்மேனின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதேபோல ஓரிரு முறை மோனோ ரெயில் நடுவழியின் நின்ற சம்பவங்களும் நடந்தன. அப்போது ராட்சத ஏணி மூலம் அதில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டனர். போதிய பராமரிப்பு இல்லாததால் மோனோ ரெயில் விபத்துகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.