பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்


பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 11 Nov 2017 4:30 AM IST (Updated: 11 Nov 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

விவசாயம் பொய்த்ததால் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை விவசாயிகள் சங்கத்தலைவர் ராஜசேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

விராலிமலை விவசாயிகள் சங்கத்தில் நான் உள்பட 50–க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளோம். நாங்கள் மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்தை பெற்றுள்ளோம். விவசாயம் பொய்த்துப்போனால் இத்திட்டத்தின்கீழ் பயிர் காப்பீடு வழங்கப்படும். கடந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால் பயிர்கள் கருகியது.

இதனால் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பணம் கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தோம். காப்பீட்டு திட்டத்தின்படி நெற்பயிருக்கு ரூ.23 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக ஆய்வு நடத்திய அதிகாரிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படும் தொகையை இறுதி செய்தனர்.

இந்த ஆய்வில் விராலிமலை கிராமத்துக்கு 11.55 சதவீதமும், இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு 66.66 சதவீதம் வரையும் இழப்பீடு தொகையை நிர்ணயம் செய்துள்ளனர்.

பருவ மழை பொய்த்ததால் பெரும் நஷ்டத்தை சந்தித்த எங்களுக்கு இழப்பீட்டு தொகையை அதிகரிக்கக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்ததில் ஏற்பட்ட வேறுபாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்க வேண்டும். விராலிமலை விவசாயிகள் சங்கத்தினருக்கு உரிய இழப்பீட்டை 12 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வக்கீல் கணபதி சுப்பிரமணியன் ஆஜரானார்.

விசாரணைக்கு முடிவில், ‘‘மனுதாரர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். காப்பீட்டு தொகை வழங்குதில் உள்ள வேறுபாடுகள் தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story