திருப்பூரில் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது


திருப்பூரில் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 11 Nov 2017 3:15 AM IST (Updated: 11 Nov 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 60 பவுன் நகை மற்றும் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் காலேஜ் ரோடு அணைபாளையம் சோதனைசாவடியில் நேற்று முன்தினம் காலை 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள்.

இதையடுத்து போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்களில் ஒருவரின் சட்டையின் பின்னால் முதுகுபகுதியில் கத்தி இருந்ததை போலீசார் கண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவர் அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் அந்தோணியார் கோவில் வீதியை சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் ஜெகதீஸ் என்பதும், தற்போது அவினாசியை அடுத்த குப்பாண்டம்பாளையம் பகுதியில் வசித்து வந்ததும், பின்னால் உட்கார்ந்து வந்தவர் 15 வேலம்பாளையத்தை அடுத்த அருமைக்காரர் தோட்டம் நேரு வீதியை சேர்ந்த துரைசாமியின் மகன் நவீன்குமார் (23) என்பதும் தெரியவந்தது.

பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. போலீசாரிடம் பிடிபட்ட இருவரும் கடந்த மே மாதம் 15–ந்தேதி இரவு சாமுண்டிபுரம் ஏ.பி.நகரில் பெண்ணிடம் சங்கிலியை பறித்தது, கடந்த மாதம் 3–ந்தேதி மாலை இந்திராநகரில் பெண்ணிடம் சங்கிலி பறித்தது, 16–ந்தேதி இரவு சாமுண்டிபுரம் குலாம் காதர் கார்டன் பகுதியில் பெண்ணிடம் நகையை பறித்துச்சென்றது, 25–ந்தேதி இரவு காந்திநகர் அருகில் பெண்ணிடம் நகை பறித்தது மற்றும் கடந்த 8–ந்தேதி மாலை அனுப்பர்பாளையம் பஸ் நிறுத்தத்தில் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் கைக்கெடிகாரத்தை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர்.

ஏற்கனவே இந்த 5 வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் இருந்ததால் அந்த வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதை ஜெகதீஸ் மற்றும் நவீன்குமார் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 60 பவுன் நகைகளையும், வழிப்பறி செயலுக்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்த போலீசார் திருப்பூர் ஜே.எம்.3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஜெகதீஸ் மீது திருச்சி மாவட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு மற்றும் கொலை வழக்குகள் இருந்ததாகவும், திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும், ஊரக போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், அவினாசி போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் 25–ந்தேதி இரவு ஓய்வு பெற்ற முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு மயில்சாமியின் மனைவி நிர்மலா (57) அவினாசி ரோடு காந்திநகரில் பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் அவர் கழுத்தில் கிடந்த 16 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். தற்போது பல்வேறு வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜெகதீஸ் மற்றும் நவீன்குமார் 2 பேரும்தான் நிர்மலாவிடம் சங்கிலியை பறித்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story