தலைவாசல் அருகே கைலாசநாதர் கோவிலில் திருட்டு போன 3 வெண்கல சிலைகள் சுடுகாட்டில் வீச்சு
தலைவாசல் அருகே கைலாசநாதர் கோவிலில் திருட்டு போன 3 வெண்கல சிலைகள் சாக்குப்பையில் கட்டி சுடுகாட்டில் வீசப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைவாசல்,
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காமக்காபாளையம் கிராமத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். அதே பகுதியை சேர்ந்த செல்வமணி (வயது 55) என்பவர் கோவில் பூசாரியாக உள்ளார். இவர், சம்பவத்தன்று கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அவர் மறுநாள் காலை கோவிலின் நடை திறக்க வந்தபோது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது 3 வெண்கல சிலைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. அது சிவகாம சுந்தரி, காமாட்சி அம்மன், சண்டிகேஸ்வரர் சாமி சிலைகள் ஆகும். இதுகுறித்து தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று காமக்காபாளையம் சுடுகாட்டு பகுதியில் ஆடு மேய்க்க சிலர் சென்றனர். அப்போது அந்த பகுதியில் சாக்குப்பை ஒன்று கிடந்தது. இதைப்பார்த்த அவர்கள் தலைவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு சென்று சாக்குப்பையை பிரித்து பார்த்தனர்.
அப்போது அதில் 3 சாமி சிலைகள் இருந்தது. விசாரணையில் அது கைலாசநாதர் கோவிலில் திருடப்பட்ட வெண்கல சிலைகள் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த சிலைகளை போலீசார் மீட்டனர். அந்த சிலைகளை இந்து சமய அறநிலையத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சிலைகளை சுடுகாட்டில் வீசி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.