வாகன சோதனையின் போது சப்–இன்ஸ்பெக்டரை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம்
மணப்பாறையில் வாகன சோதனையின் போது சப்–இன்ஸ்பெக்டரை முற்றுகையிட்டு பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மணப்பாறை,
மணப்பாறை, வையம்பட்டி, புத்தாநத்தம், வளநாடு, துவரங்குறிச்சி ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் போலீசார் வாகன சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்து வருகின்றனர். மேலும் வாகனத்திற்குரிய அனைத்து ஆவணங்களும், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவைகள் இருந்தாலும் மணப்பாறையில் இருந்து துவரங்குறிச்சி செல்ல வேண்டும் என்றால் மணப்பாறை, புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட 3 போலீஸ் நிலையங்களில் உள்ள போலீசார் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்து அனுப்பிடும் நிலை இருந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் மணப்பாறை பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் ஊர்க்காவல் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் ஓரமாக நிறுத்தி விட்டு வருவதாக கூறினார். அப்போது அங்கு நின்று இருந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர் மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நபர் அங்கிருந்த சப்–இன்ஸ்பெக்டர் ராஜேசிடம் சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வருவதற்குள் ஏன் ஊர்க்காவல் படை வீரர் பிடித்து இழுத்து வருகிறார் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு வந்து சப்–இன்ஸ்பெக்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகன சோதனை என்ற பெயரில் தினமும் பொதுமக்களை பிடித்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமம் கேட்கும் நிலையில் அப்படி ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை காண்பித்தாலும் ஹெல்மெட் போடவில்லை, அதிக வேகம் என்று கூறி ஏதாவது அபராதம் வசூலிக்கும் நிலை இருக்கிறது. இதனால் கூலி வேலைக்கு செல்வோர் சம்பளத் தொகையை போலீசாரிடமே கொடுத்து விட்டு செல்லும் நிலை இருப்பதாகவும் கூறி தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஊர்க்காவல் படை வீரர் போராட்டம் தீவிரமாவதை அறிந்து அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தொடர் வாகன சோதனை நடத்தி குறிப்பிட்ட வழக்கு பதிவு செய்யவேண்டும் என்ற நிர்ப்பந்தம் உள்ளதால் தான் இதுபோன்று வாகன சோதனை நடத்த வேண்டி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணப்பாறை அருகே வாகன சோதனையின் போது டிராக்டரை போலீசார் விரட்டிச் சென்றதில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
இதே போல் வளநாடு போலீஸ் பகுதி கைகாட்டியில் இரவில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை போலீசார் திடீரென நிறுத்த முயன்றதால் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டதில் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாகன சோதனையின் போது போலீசார் திடீரென வாகனங்களை நிறுத்துவதால் பலரும் கீழே விழுந்து படுகாயமடையும் நிலை உள்ளது. இந்த நிலை தொடராமல் இருக்க போலீஸ் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.