கவுரி லங்கேசை கொலை செய்த கொலையாளிகள் பற்றிய முக்கிய துப்பு கிடைத்துள்ளது ராமலிங்கரெட்டி பேட்டி
கவுரி லங்கேசை கொலை செய்த கொலையாளிகள் பற்றிய முக்கிய துப்பு கிடைத்துள்ளது என்று போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.
பெங்களூரு,
கவுரி லங்கேசை கொலை செய்த கொலையாளிகள் பற்றிய முக்கிய துப்பு கிடைத்துள்ளது என்று போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.
கவுரி லங்கேஷ் கொலைபெங்களூரு ராஜராஜேசுவரிநகரில் வசித்து வந்த பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் கடந்த செப்டம்பர் மாதம் 5–ந் தேதி மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். மேலும் கொலையாளிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கவுரி லங்கேசை கொலை செய்ததாக கருதப்படும் 2 பேரின் வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் கொலையாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. கவுரி லங்கேசை தீர்த்து கட்டிய கொலையாளிகளை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:–
முக்கிய துப்பு கிடைத்துள்ளதுபெண் பத்திரிகையாளரான கவுரி லங்கேசை கொலை செய்தவர்களை பிடிக்க சிறப்பு விசாரணை குழுவினர் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். எல்லாவிதமான கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளிகள் பற்றிய முக்கிய துப்பு சிறப்பு விசாரணை குழுவினருக்கு கிடைத்துள்ளது. கவுரி லங்கேசை கொலை செய்தவர்கள் யார்? என்பதும் தெரியவந்துள்ளது. அதுபற்றிய விவரங்களை பகிரங்கமாக தெரிவிக்க இயலாது. விசாரணை நடைபெற்று வருவதால், அதுபோன்ற விவரங்கள் வெளியே கசிந்தால் கொலையாளிகள் தப்பிக்க வாய்ப்புள்ளது.
இந்த வழக்கில் விரைவில் தீர்வு காணப்படும். கொலையாளிகள் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார்கள். அதில், எந்த சந்தேகமும் இல்லை. கொலையாளிகள் தப்பிக்கவும் முடியாது. அவர்களை போலீசார் தப்பிக்கவும் விடமாட்டார்கள். மற்ற வழக்குகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை காட்டிலும் கவுரி லங்கேசை கொலை செய்தவர்களை பிடிப்பதில் சிறப்பு விசாரணை குழுவினருடன் சேர்ந்து அரசும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
கூடிய விரைவில் கைதுகவுரி லங்கேசை கொலை செய்தவர்கள் என கருதப்படும் 2 கொலையாளிகளின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வரைபடத்தை போலீசாரே வரைந்து வெளியிடவில்லை. தீவிர விசாரணைக்கு பிறகு கிடைத்த தகவல்கள், தொழில்நுட்ப குழுவினர் கொடுத்த தகவல்கள், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சொன்ன அடையாளங்கள் மூலமே, அந்த 2 வரைபடமும் வரையப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் வரைபடம் வெளியிட்டதிலும் சில குறைகள் இருப்பதாக பா.ஜனதாவினர் குற்றச்சாட்டு கூறுகிறார்கள். வரைபடம் வெளியானதற்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே கவுரி லங்கேசை கொலை செய்த முக்கிய குற்றவாளிகள் கூடிய விரைவில் கைது செய்யப்படுவது உறுதி.
இவ்வாறு மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.