திட்டக்குடி பகுதியை கலக்கிய வழிப்பறி கொள்ளையர்கள் 7 பேர் கைது


திட்டக்குடி பகுதியை கலக்கிய வழிப்பறி கொள்ளையர்கள் 7 பேர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2017 4:00 AM IST (Updated: 13 Nov 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி பகுதியை கலக்கி வந்த வழிப்பறி கொள்ளையர்கள் 7 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ராமநத்தம், ஆவினங்குடி, நெய்வேலி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் நடந்து வந்தது. குறிப்பாக தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தி வந்தனர். இதனால் மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்திரவின் படி போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் டெல்டா பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான தனிப்படை போலீசாரும் வழிப்பறி கொள்ளையர்கள் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு தொழுதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

இதையடுத்து அவர்களை ராமநத்தம் போலீசில் அவர்கள் ஒப்படைத்தனர். தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் அந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வழிப்பறி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் கூறிய தகவலின் பேரில் கல்லூர் மாரியம்மன் கோயில் அருகே மேலும் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

போலீசாரின் விசாரணையில் அவர்கள் புதுச்சேரி பூர்ணாங்குப்பத்தை சேர்ந்த கார்த்திகேயன்(வயது 21), தவளக்குப்பம், தானம்பாளையம், நல்லவாடு சாலை, அபிஷேகபாக்கம் ஆகிய பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவர்கள் 6 பேர் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில், திட்டக்குடி, ராமநத்தம் பகுதியில் உள்ள கொரக்கை, ஆலம்பாடி ரோடு, இடைச்செருவாய் ஏரிக்கரை, கோடங்குடி, அருகேரி, பெண்ணாடம் பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டியும், மோட்டார் சைக்கிளில் சென்றும் நகையை வழிப்பறி செய்து சென்ற சம்பவங்கள் தேடப்பட்டு வந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவத்தை இவர்கள் அனைவரும், சமீபத்தில் திருட்டு வழக்கில் கைதாகி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் இவர்கள் இத்தகைய வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 10¾ பவுன் நகை, 2 செல்போன், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story