திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகை– ரூ.1 லட்சம் கொள்ளை
திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 7–வது கிராசில் வசித்து வருபவர் சவேரியார் (வயது 40). இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவி செசிந்தாமேரியுடன் (38) உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
பின்னர் இரவு 10 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த 70 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் காணாமல் போயிருந்தது. உடனே திண்டுக்கல் மேற்கு போலீசாருக்கு சவேரியார் தகவல் தெரிவித்தார்.
உடனே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதற்கிடையே கைரேகை நிபுணர் சீனியம்மாள், கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.