ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கே சொந்தம்: பரூக் அப்துல்லா கருத்துக்கு நடிகர் ரிஷி கபூர் ஆதரவு


ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கே சொந்தம்: பரூக் அப்துல்லா கருத்துக்கு நடிகர் ரிஷி கபூர் ஆதரவு
x
தினத்தந்தி 13 Nov 2017 4:00 AM IST (Updated: 13 Nov 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்ற பரூக் அப்துல்லா கருத்துக்கு நடிகர் ரிஷி கபூர் ஆதரவு தெரிவித்தார்.

மும்பை,

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்ற பரூக் அப்துல்லா கருத்துக்கு நடிகர் ரிஷி கபூர் ஆதரவு தெரிவித்தார். மரணத்துக்கு முன்பு பாகிஸ்தானை பார்த்து விட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

சுதந்திர காஷ்மீர்

பாகிஸ்தான் பிரதமர் சாகித் அப்பாசி சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தான் பிரச்சினைக்கு சுதந்திர காஷ்மீர் தான் தீர்வு என தெரிவித்தார். இந்த நிலையில் இந்த கருத்து ஏற்புடையது அல்ல என்று தெரிவித்த காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா, “இந்தியா, சீனா, பாகிஸ்தான் என மூன்று சக்திவாய்ந்த நாடுகளின் எல்லையில் உள்ள காஷ்மீரை, சுதந்திர காஷ்மீராக அறிவிக்க முடியாது. இது நடைமுறையிலும் சாத்தியம் இல்லை. அதே சமயம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது தான், இது ஒருபோதும் மாறாது. இதற்காக இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் எத்தனை தடவை போரிட்டாலும், அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்றார்.

இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தி நடிகர் ரிஷி கபூர் தன் வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:-

மரணத்திற்கு முன்...

பரூக் அப்துல்லாவுக்கு நான் தலைவணங்குகிறேன். உங்கள் கருத்தை முழுமையாக ஏற்று கொள்கிறேன். ஜம்மு-காஷ்மீர் நம்முடையது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அவர்களுடையது. பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இது ஒன்றுதான் ஒரே வழி என்று நம்புகிறேன். எனக்கு இப்போது 65 வயது ஆகிறது. நான் மரணத்திற்கு முன்பு பாகிஸ்தானை பார்க்க விரும்புகிறேன். என் பிள்ளைகள் தாங்களது வேரை பார்க்க வேண்டும். தயவுசெய்து இந்த கனவை நிறைவேற்றுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகர் ரிஷி கபூரின் மூதாதையர் பாகிஸ்தான் நாட்டில் உள்ள பெஷாவர் நகரை சேர்ந்தவர்கள். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் இவர்களின் குடும்பம் இந்தியாவிற்கு இடம் பெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story