மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மாநகராட்சி 2–வது மண்டல அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
ஈரோடு மாநகராட்சி 2–வது மண்டலத்தில் சுய உதவிக்குழுவை சேர்ந்த 125 துப்புரவு தொழிலாளர்கள் தற்காலிக பணியாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு சம்பளம் காலதாமதமாக வழங்கப்படுவதாக கூறி மண்டல அலுவலக வளாகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான், பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர்களை அழைத்தார். இதைத்தொடர்ந்து துப்புரவு தொழிலாளர்கள் அங்கிருந்து மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்றனர்.
அப்போது துப்புரவு தொழிலாளர்கள் கூறும்போது, ‘எங்களுக்கு 1–ந் தேதியில் இருந்து 5–ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் கடந்த சில மாதங்களாக 10–ந் தேதிக்கு மேல் தான் வழங்கப்படுகிறது. இதனால் குடும்பம் நடத்த மிகவும் சிரமமாக உள்ளது.
மேலும் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்வதற்கு எந்தவித ரசீதும் வழங்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.413 வழங்கவேண்டும். ஆனால் ரூ.375 மட்டும் தான் வழங்கப்படுகிறது’ என்றனர்.
அதற்கு மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான், ‘நீங்கள் அனைவரும் நாளை (அதாவது இன்று) சம்பளம் பெற்றுக்கொள்ளலாம். அடுத்த மாதத்தில் இருந்து 5–ந் தேதிக்குள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து துப்புரவு தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.