தாராபுரத்தில் காரில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் 2 வாலிபர்கள் கைது
தாராபுரம் வழியாக காரில் கடத்திச்செல்லப்பட்ட 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உப்புத்துறைபாளையம் அருகே பழனிசாலையில் காவல்துறையின் சோதனை சாவடி உள்ளது. இங்கு நேற்று மாலை வழக்கம் போல் போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தும்படி சைகை காட்டினார்கள்.
ஆனால் அந்த கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது. உடனே அங்கிருந்த போலீசார் மாவட்ட கட்டுப்பாட்டு அறை மூலம் இதுபற்றி அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் தகவல்கொடுத்தனர். அதை தொடர்ந்து அனைத்து சாலைகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
அப்போது தாராபுரம்–பொள்ளாச்சி சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த காரை போலீசார் 5 கிலோ மீட்டர் தூரம் போலீஸ் ஜீப்பில் விரட்டிச்சென்றனர். பின்னர் பஞ்சப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே அந்த காரை அவர்கள் மடக்கி பிடித்தனர். பிறகு காரிலிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி, காரை சோதனையிட்டனர். அப்போது, காரில் 5 கிலோ கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பையநாடு, பெல்லாட்டில், நெல்லிகுத்தைச் சேர்ந்தவர் யூசுப் என்பவரின் மகன் சியாஸ் (வயது 22), பாலக்காடு மாவட்டம் மன்னையன்கோட்டையைச் சேர்ந்த உம்மர் என்பவரின் மகன் ஹம்சா (25) என்பதும், இவர்கள் இருவரும் கேரளாவில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக, தேனி பகுதியிலிருந்து கஞ்சாவை காரில் கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்து, காரில் இருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்செய்தனர். மேலும் இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.