இளம்பெண் தூக்குப்போட்டு சாவு அடித்துக் கொலை செய்யப்பட்டதாக உதவி கலெக்டரிடம் உறவினர்கள் புகார்
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக பெண்ணின் உறவினர்கள், உதவி கலெக்டரிடம் புகார் கூறியுள்ளனர்.
தென்காசி,
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள சீவநல்லூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கும் சாம்பவர் வடகரையை சேர்ந்த முருகையா மகள் இசக்கியம்மாள் (வயது 23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. செந்தில்குமார் பொக்லைன் எந்திர டிரைவராக உள்ளார். அவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. குழந்தை இல்லாததால் கணவன்–மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்தில்குமாரின் தம்பி மனைவிக்கு குழந்தை பிறந்தது. அதன்பிறகு செந்தில்குமார், மனைவியிடம் நமக்கு பிறகு திருமணம் முடிந்த என்னுடைய தம்பிக்கு குழந்தை பிறந்து விட்டது என்று கூறி மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவும் கணவன்– மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு செல்வகுமார் உள்பட வீட்டில் அனைவரும் தூங்க சென்றார். ஆனால் இசக்கியம்மாள், வீட்டின் மாடிக்கு சென்று கயிற்றால் தூக்கில் தொங்கினார். அவரது சத்தம் கேட்டு திடீரென்று விழித்த செந்தில்குமார், மாடியில் தூக்கில் தொங்கிய மனைவியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். இசக்கியம்மாள் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த இசக்கியம்மாளின் தந்தை முருகையா தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு தன்னுடைய குடும்பத்தினருடன் விரைந்து வந்தார். மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். இசக்கியம்மாள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இசக்கியம்மாள் சாவு குறித்து இலத்தூர் போலீசில் முருகையா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்தார். இசக்கியம்மாளுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் தென்காசி உதவி கலெக்டர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினார்.
விசாரணையின் போது, செல்வகுமாரும், அவருடைய உறவினர்களும் இசக்கியம்மாளை அடித்து கொலை செய்து விட்டு தூக்கில் தொங்க விட்டதாக முருகையா மற்றும் அவருடைய உறவினர்கள் புகார் கூறினார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் ராஜேந்திரன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.