ஏரல் அருகே பயங்கரம் தொழிலாளி விறகு கட்டையால் அடித்துக் கொலை உறவினர் கைது


ஏரல் அருகே பயங்கரம் தொழிலாளி விறகு கட்டையால் அடித்துக் கொலை உறவினர் கைது
x
தினத்தந்தி 15 Nov 2017 2:30 AM IST (Updated: 14 Nov 2017 7:44 PM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே தொழிலாளி விறகு கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

ஏரல்,

ஏரல் அருகே தொழிலாளி விறகு கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மது போதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட உறவினரை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி

ஏரலை அடுத்த திருவழுதிநாடார்விளையை சேர்ந்தவர் ஆத்திப்பழம் (வயது 55). கூலி தொழிலாளி. இவர் சமையல் வேலை, வாணவெடி போடும் வேலை உள்ளிட்ட வேலைகளுக்கு சென்று வந்தார். இவருடைய மனைவி முத்துக்கனி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே முத்துக்கனி 2 மகன்களுடன் சாயர்புரம் பகுதியில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னர் ஆத்திப்பழம் தனது ஊரில், மற்றொருவரின் 2–வது மனைவியாக வாழ்ந்து வந்த மகாலட்சுமி என்பவரை தன்னுடன் அழைத்து வந்து குடும்பம் நடத்தினார். மகாலட்சுமிக்கும் 4 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களை, 2–வது கணவரிடம் விட்டு விட்டு, ஆத்திப்பழத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

விறகு கட்டையால் தாக்கி...

இவர்களது, பக்கத்து வீட்டில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி (46). இவர் சென்னையில் உள்ள பாத்திரக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தியும், ஆத்திப்பழமும் உறவினர்கள் ஆவர். சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தி சொந்த ஊருக்கு வந்தார்.

பின்னர் நேற்று முன்தினம் மாலையில் கிருஷ்ணமூர்த்தியும், ஆத்திப்பழமும் தங்களது ஊரில் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி நடந்து சென்று கொண்டிருந்தனர். வீட்டின் அருகில் சென்றபோது, மது போதையில் இருந்த கிருஷ்ணமூர்த்திக்கும், ஆத்திப்பழத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, ஆத்திப்பழத்தை கீழே தரையில் தள்ளி விட்டு, விறகு கட்டையால் அவரை தாக்கினார்.

உறவினர் கைது

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆத்திப்பழம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகிலா, வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தார். மது போதையில் தொழிலாளியை விறகு கட்டையால் உறவினர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story