‘சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மையே’ பரபரப்பு தகவல்


‘சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மையே’ பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 15 Nov 2017 4:45 AM IST (Updated: 15 Nov 2017 3:46 AM IST)
t-max-icont-min-icon

ரூ.2 கோடி லஞ்ச புகார் பற்றி விசாரணை நடக்கவில்லை சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மை உயர்மட்டக்குழு விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேடுகள் குறித்து அமைக்கப்பட்ட வினய்குமார் தலைமையிலான உயர்மட்டக்குழு விசாரணை அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. அதில் சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மையே என்று கூறப்பட்டு இருக்கிறது.

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க.(அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் அவர்கள் சாதாரண அறையில் வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறி வந்தனர். ஆனால் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா தனது மேல் அதிகாரியான சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு கடந்த ஜூலை மாதம் ஒரு அறிக்கை வழங்கினார்.

அதில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக தாங்கள்(சத்தியநாராயணராவ்) ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறி இருந்தார்.

ரூபா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையை விட்டு வெளியே ‘ஷாப்பிங்’ சென்று விட்டு திரும்புவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தன் மீதான குற்றச்சாட்டை சத்தியநாராயணராவ் முழுவதுமாக மறுத்தார். அதே நேரத்தில் தான் கூறிய புகாரில் ரூபா உறுதியாக இருந்தார். இதனால் சிறைத்துறை அதிகாரிகள் சத்தியநாராயணராவும், ரூபாவும் பகிரங்கமாக கருத்து மோதலில் ஈடுபட்டனர். இது கர்நாடக அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. அந்த குழு தனது விசாரணையை நிறைவு செய்து 300 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கர்நாடக அரசிடம் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மையே என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சிறை விதிமுறைகளை மீறி சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மை தான். அவருக்கு ஒரு கட்டிடத்தில் 5 அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. அதில் ஜன்னல்கள் திரையால் மூடப்பட்டு இருந்தது. இதை வேறு கைதிகள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக இந்த திரையை போட்டு மூடி இருந்தனர். அந்த 5 அறைகளுக்குள் வேறு யாரும் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் போலீஸ் பாதுகாப்பும் அங்கு போடப்பட்டு இருந்தது.

சமையல் எரிவாயு அடுப்பு, குக்கர் போன்ற வசதிகளும் அவருக்கு செய்து கொடுக்கப்பட்டு இருந்தன. தொலைக்காட்சி பெட்டியும் வழங்கப்பட்டு இருந்தது. சிறை தலைமை சூப்பிரண்டு அலுவலக அறையின் பக்கத்து அறையில் தன்னை பார்க்க வரும் கட்சி நிர்வாகிகளுடன் சசிகலா மணிக்கணக்கில் பேசி இருக்கிறார். சிறையில் சசிகலாவுக்கு வேலை எதுவும் ஒதுக்கவில்லை.

அதனால் சிறை சீருடை அணிவதில் இருந்து அவருக்கு அதிகாரிகள் விலக்கு அளித்துள்ளனர். இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் மற்ற வசதிகள் அனைத்தும் சிறை விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான சிறை தலைமை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார், சூப்பிரண்டு அனிதா ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல், முத்திரைத்தாள் மோசடி வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த அப்துல் கரீம்லால் தெல்கிக்கு கோர்ட்டு உத்தரவையும் மீறி சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. சிறையில் உள்ள கைதிகளிடம் கஞ்சா புழக்கம் உள்ளது. சிறையில் அதிகாரிகள் கையாள வேண்டிய ஆவணங்களை கைதிகளும் கையாண்டுள்ளனர்.

சிறை மருத்துவமனையில் டாக்டர் மீது கைதி தாக்குதல் நடத்தியது உண்மை. பரோலில் செல்ல விரும்பிய கைதிகளுக்கு சாதகமான அறிக்கை வழங்காததால் கோபமடைந்த கைதி, டாக்டர் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார். சிறை மருத்துவமனையில் பணிசெய்யும் நர்ஸ் ஒருவரிடம் கைதிகள் தவறாக நடக்க முயன்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும், விசாரணை குழுவினர் அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளனர். அதாவது, சிறை கைதிகளிடம் கஞ்சா, செல்போன் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகளை தனித்தனியாக அடைக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விசாரணையில் என்னென்ன அம்சங்கள்?

1. சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதா? இல்லையா?

2. அப்துல் கரீம்லால் தெல்கிக்கு விதிமுறைகளை மீறி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதா? இல்லையா?

3. சிறையில் கஞ்சா நடமாட்டம் இருக்கிறதா? இல்லையா?.

4. டாக்டர் மீது கைதி ஒருவர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் புகார் உண்மையா? இல்லையா?

5. சிறையில் அதிகாரிகள் கையாளும் பதிவேட்டை கைதிகள் சிலர் நிர்வகிப்பதாக வெளியாகியுள்ள புகார் உண்மைதானா?.

6. நர்ஸ் ஒருவரிடம் கைதி தவறாக நடக்க முயற்சி செய்தார் என்ற புகார் உண்மையா? இல்லையா?.

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் இந்த 6 புகார்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி வினய்குமார் தலைமையிலான உயர்மட்டக்குழுவுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி அந்த 6 அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தி அந்த குழு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா கூறிய முக்கிய குற்றச்சாட்டான சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார் கூறி இருந்தார். இந்த புகார் குறித்து விசாரிக்கும்படி அரசு உத்தரவிடவில்லை. இதனால் அதுபற்றி வினய்குமார் குழு தனது அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story