கோவையில் பணியிடம் ஒதுக்கக்கோரி மாநகராட்சி சுகாதார அதிகாரி உண்ணாவிரதம்


கோவையில் பணியிடம் ஒதுக்கக்கோரி மாநகராட்சி சுகாதார அதிகாரி உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 16 Nov 2017 4:30 AM IST (Updated: 16 Nov 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

பணியிடம் ஒதுக்கக் கோரி கோவை மாநகராட்சி சுகாதார அதிகாரி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

கோவை,

கோவை மாநகராட்சியில் சுகாதார அதிகாரியாக பணியாற்றி வருபவர் பிச்சைமணி (வயது 52). இவர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நேற்றுக்காலை 9 மணியளவில் அமர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். இது குறித்து சுகாதார அதிகாரி பிச்சைமணி கூறியதாவது:–

நான் 1986–ம் ஆண்டு கோவை மாநகராட்சியில் சுகாதார உதவியாளராக பணியில் சேர்ந்து சுகாதார ஆய்வாளராகி தற்போது சுகாதார அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். சுகாதார உதவியாளராக பணியில் சேர்ந்து ஓய்வு பெறும்போது சுகாதார ஆய்வாளராக தான் பணி ஓய்வு பெறுகிறோம். வேறு பதவி உயர்வு கிடையாது.

எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2015–ம் ஆண்டு மனு கொடுத்தோம். அதன்பேரில் சுகாதார ஆய்வாளர்கள் பணி மூப்பு அடிப்படையில் சுகாதார அதிகாரியாக பதவி உயர்வு பெறலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் சுகாதார அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விட்டனர்.

ஆனால் எனக்கு சுகாதார அதிகாரி பதவி உயர்வு கொடுத்த பிறகும் பணியிடம் ஒதுக்கப்பட வில்லை. நான் இன்னும் சுகாதார ஆய்வாளர் பணியை தான் செய்து வருகிறேன். எனக்கு கீழ் பணிபுரிபவர்கள் சுகாதார அதிகாரியாக வேலை செய்கிறார்கள். இது தொடர்பாக பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடைய உண்ணாவிரத போராட்டத்துக்கு கோவை மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மாநகராட்சி உயர் அதிகாரிகள் பிச்சைமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று நேற்று மாலை 5.45 மணியோடு தனது உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டு பிச்சைமணி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


Next Story