திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளரிடம் மோசடி தொழில் அதிபர் கைது


திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளரிடம் மோசடி தொழில் அதிபர் கைது
x
தினத்தந்தி 18 Nov 2017 3:30 AM IST (Updated: 18 Nov 2017 2:06 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டு நிறுவனத்துக்கு ஆடைகளை வாங்கி திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.84 லட்சம் மோசடி செய்த ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபரை திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைதுசெய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் காங்கேயம் ரோடு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 52). இவர் அந்த பகுதியில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா கில்ஸ் பகுதியை சேர்ந்த சிராஜ் சோமாலி(34) என்பவர் ஆடைகளை வாங்கி வர்த்தகம் செய்து வந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராகவும் சிராஜ் சோமாலி உள்ளார். அந்த நிறுவனத்துக்கு ரூ.1 கோடியே 64 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகளை வாங்குவதற்கு சிராஜ் சோமாலி, லோகநாதனிடம் ஆர்டர் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

அந்த ஆர்டருக்கு ஏற்ப ரூ.1 கோடியே 64 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகளை தயாரித்து லோகநாதன் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள அந்த நிறுவனம் லோகநாதனுக்கு வங்கியின் மூலமாக பணம் செலுத்தி விட்டு அந்த ஆவணங்களை கொடுத்து பனியன் சரக்குகளை பெற்று வந்துள்ளனர். இதன்படி, ரூ.80 லட்சத்தை லோகநாதனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மீதம் உள்ள ரூ.84 லட்சம் லோகநாதனுக்கு அனுப்பி வைக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் மொத்த பனியன் ஆடைகளையும் அமெரிக்க நிறுவனம் பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து லோகநாதன், சிராஜ் சோமாலியிடம் தொடர்பு கொண்டு கேட்டும், அவர் உரிய பதில் அளிக்கவில்லை.

இதைதொடர்ந்து லோகநாதன் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்ற போலீசார் விசாரணை நடத்தியபோது, சிராஜ் சோமாலி உள்பட 6 பேர் சேர்ந்து லோகநாதனுக்கு முழுப்பணத்தையும் செலுத்தியதைப்போல் வங்கியின் போலியான ஆவணங்கள் தயாரித்து பனியன் ஆடைகள் அனைத்தையும் பெற்றது தெரியவந்தது.

 இதைதொடர்ந்து ரூ.84 லட்சம் மோசடி செய்ததாக சிராஜ் சோமாலி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். நேற்று சிராஜ் சோமாலியை திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.


Next Story