குண்டு வெடிப்பில் காயமடைந்த ரவுடி கார்த்திக்கு யார்? யாருடன் தொடர்பு போலீசார் தீவிர விசாரணை


குண்டு வெடிப்பில் காயமடைந்த ரவுடி கார்த்திக்கு யார்? யாருடன் தொடர்பு போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 17 Nov 2017 11:00 PM GMT (Updated: 17 Nov 2017 9:00 PM GMT)

குண்டு வெடிப்பில் காயமடைந்த ரவுடி கார்த்திக்கு எந்தந்த ரவுடிகளுடன் தொடர்பு இருக்கிறது? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வானூர்,

புதுவை முத்தியால்பேட்டை வாழைக்குளத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி கார்த்தி என்கிற எலி கார்த்தி (வயது 27). இவர் கடந்த 14–ந் தேதி தனது மனைவி அருணா மற்றும் 3 மாத பெண் குழந்தையுடன் விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்புக்கு குடியேறினார்.

மறுநாள் 15–ந் தேதி வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டை ரகசியமாக தயாரித்தபோது, குண்டு வெடித்தது. இதில் கார்த்தியின் இரண்டு கைகளும் சிதைந்து போனது. ஆபத்தான நிலையில் அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது இரண்டு கைகளிலும் விரல்கள் முற்றிலும் சேதமடைந்து போனதால், அதை துண்டிக்க டாக்டர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்தி வெடிகுண்டு தயாரிக்க அவரது மனைவி அருணா உடந்தையாக இருந்ததாக அவரை போலீசார் கைது செய்து, கைக்குழந்தையுடன் கடலூர் மத்திய சிறையில் நேற்று முன்தினம் அடைத்தனர்.

இந்த நிலையில் கார்த்தி தொடர்ந்து மயக்க நிலையில் இருப்பதால் அவரிடம் வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக போலீசார் முழுமையாக விசாரணை நடத்த முடியாமல் தவிக்கின்றனர். இருப்பினும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்?, யாருக்கு எல்லாமல் வெடிகுண்டுகள் தயாரித்து கொடுத்தார்? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவை குருசுக்குப்பத்தை சேர்ந்த பிரபல ரவுடி டிராக் சிவா கூட்டாளியாகத்தான் கார்த்தி செயல்பட்டு வந்தார். இந்த வெடி குண்டுகளை அவர் பதுக்கி வைத்ததற்கு பின்னணியில் ரவுடி டிராக் சிவா இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே அவரை அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக புதுவை மாநில போலீசாரின் உதவியை விழுப்புரம் மாவட்ட போலீசார் நாடியுள்ளனர்.

இதற்கிடையில் கார்த்தியின் கூட்டாளிகள் 2 பேரை பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.


Next Story