போலீசார் பிடித்ததால் பாட்டிலால் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்


போலீசார் பிடித்ததால் பாட்டிலால் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்
x
தினத்தந்தி 18 Nov 2017 12:32 AM GMT (Updated: 18 Nov 2017 12:32 AM GMT)

போலீசார் பிடித்ததால் பாட்டிலால் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர், காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் சாய் நகரைச் சேர்ந்தவர் மைக்கேல்(வயது 40). இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து துரைப்பாக்கம்–பல்லாவரம் ரேடியல் சாலையில் செல்போனில் பேசியபடியே வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், திடீரென மைக்கேலிடம் இருந்து செல்போனை பறித்துச்சென்றார். உடனே மைக்கேல், அந்த வழியாக ரோந்து பணியில் இருந்த போலீசாருடன் சேர்ந்து அந்த வாலிபரை விரட்டிச்சென்றார்.

பெருங்குடி சுங்கச்சாவடி அருகே சென்ற போது, செல்போனை பறித்துச்சென்ற வாலிபர், மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி விழுந்தார். அவரை போலீசார் பிடிக்க முயன்றனர். உடனே அந்த வாலிபர், கீழே கிடந்த காலி பீர்பாட்டிலை உடைத்து, தன்னை பிடித்தால் பாட்டிலால் குத்தி தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினார்.

ஆனாலும் போலீசார் அவரை மடக்கி பிடிக்க முயன்றதால் அந்த வாலிபர், பாட்டிலால் தனது கழுத்து மற்றும் கைகளில் அறுத்துக்கொண்டார். இதில் காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணையில் அவர், சென்னை சூளைமேட்டை சேர்ந்த ராஜி(22) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story