மின்விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பொதுமக்களுக்கு மின்வாரிய அதிகாரி விளக்கம்
மின் விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு, தூத்துக்குடி நகர், வடக்கு மின் வினியோக உதவி செயற்பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி,
மின் விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு, தூத்துக்குடி நகர், வடக்கு மின் வினியோக உதவி செயற்பொறியாளர் விஜயசங்கர பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–
மின் விபத்துபொதுமக்கள் மின் விபத்துகளை தவிர்க்க, ஐ.எஸ்.ஐ. தரச்சான்று மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டும். டி.வி., கிரைண்டர், மோட்டார் போன்ற சாதனங்களை இயக்கும் போதும், பழுது பார்க்கும் போதும் கவனத்துடன் செயல்பட வேண்டும். மின்பாதைக்கு அருகே கட்டிடம் கட்டும் போது போதுமான கிடைமட்ட மற்றும் உயர்மட்ட இடைவெளி ஏற்படுத்தி, கட்ட வேண்டும்.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான மின்கம்பம் மற்றும் மின்மாற்றியில், மின்தடையை சரிசெய்யவோ, அல்லது வேறு காரணங்களுக்கோ கண்டிப்பாக ஏறக்கூடாது. வீட்டில் உள்ள ஒயர்கள் பழுதடைந்து விட்டால் உடனடியாக மாற்றிட வேண்டும்.
துண்டு ஒயர்கள்வீட்டில் மின் நீட்டிப்பு செய்யும் போது தரமான ஒயர்களை பயன்படுத்த வேண்டும். துண்டு ஒயர்கள் மூலம் இணைப்பு ஏற்படுத்தி பயன்படுத்த வேண்டாம். கட்டிடங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது மின்சாரத்தை நிறுத்தி விட்டு, வேலை செய்ய வேண்டும். விவசாய இணைப்புகளில் மோட்டார், சுவிட்சு பெட்டி ஆகியவற்றை பழுதுடன் இயக்க கூடாது.
வெல்டிங், கட்டிங் எந்திரம் போன்றவற்றை உபயோகப்படுத்த துண்டு ஒயர்களை பயன்படுத்த வேண்டாம். பொதுமக்கள் தங்கள் வீடு, கடை மற்றும் அனைத்து இடங்களிலும் மரங்களின் கிளைகள் மின் கம்பிகளுக்கு அருகில் இருந்தால் அதனை மின்வாரிய ஊழியர்கள் உதவியுடன் வெட்ட வேண்டும். இதுபோன்ற வழிமுறைகள் மூலம் மின் விபத்துகளை தவிர்க்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.