மணல் கடத்தல்; 7 பேர் கைது
மணல் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் செவிலிமேடு பாலாற்றில் மோட்டார் சைக்கிள், மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது மாட்டுவண்டிகள், மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையொட்டி காஞ்சீபுரம் செவிலிமேடு பகுதியை சேர்ந்த விஜயகாந்த் (வயது 33), வினோத் (33), செல்வம் (47), திருப்பருத்திகுன்றத்தை சேர்ந்த பாபு (26), குமரன் (19) ஆகியோரை போலீசார் கைது செய்து மாட்டுவண்டி, மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் சப்–இன்ஸ்பெக்டர்கள் புஷ்பராஜ், சதாசிவம், ஆறுமுகம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த வெண்மணம்புதூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றுப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து அதை ஓட்டி வந்த கீழ் விளாகம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (27), சின்னதுரை (48) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.