வடக்கு சட்டமன்ற தொகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்க பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பு அகற்றப்படும் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அண்ணாநகர் யானைக்குழாய் கால்வாய் தூர்வாரும் பணி நேற்று நடைபெற்றது.
மதுரை,
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அண்ணாநகர் யானைக்குழாய் கால்வாய் மேலமடை பகுதியில் தொடங்கி வண்டியூர் வரை செல்கிறது. இந்த கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்ததால் புதர்கள் மண்டி கிடக்கிறது. இந்த கால்வாய் தூர்வாரும் பணி நேற்று நடைபெற்றது. வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா தலைமையில் தூர்வாரும் பணி நடந்தது. அப்போது கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அகற்றப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.