மலை ரெயில் என்ஜின் இடமாற்றம்: குன்னூரில் தென்னக ரெயில்வே தலைமை என்ஜினீயர் ஆய்வு


மலை ரெயில் என்ஜின் இடமாற்றம்: குன்னூரில் தென்னக ரெயில்வே தலைமை என்ஜினீயர் ஆய்வு
x
தினத்தந்தி 19 Nov 2017 3:45 AM IST (Updated: 19 Nov 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் ரெயில் நிலையத்தில் காட்சி பொருளாக வைக்கப்படும் மலை ரெயில் என்ஜின் இடமாற்றப்படும் பணியை தென்னக ரெயில்வே தலைமை மெக்கானிக்கல் என்ஜினீயர் ஏ.கே.கத்பால் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

குன்னூர்,

ஆங்கிலேயர் காலத்தில் நீலகிரி மலை ரெயில் போக்குவரத்துக்காக பாதை அமைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 1899–ம் ஆண்டு மேட்டுப்பாளையம்–குன்னூர் இடையேயும், 1908–ம் ஆண்டு குன்னூர்– ஊட்டி இடையேயும் மலை ரெயில் போக்குவரத்தை ஆங்கிலேயர்கள் தொடங்கினார்கள்.

கல்லார் முதல் குன்னூர் வரை செங்குத்தான மலைப்பாதை என்பதால் பல் சக்கர தண்டவாளம் அமைக்கப்பட்டு ரெயில் இயக்கப்படுகிறது. ஆரம்ப கால கட்டத்தில் நிலக்கரி நீராவி என்ஜின்கள் மூலம் இயக்கப்பட்டன. பின்னர் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கரி நீராவி என்ஜின்களை இயக்குவது நிறுத்தப்பட்டன. இதன்படி குன்னூர்–ஊட்டி இடையே பயோ டீசல் என்ஜின் மூலமாகவும், குன்னூர்– மேட்டுப்பாளையம் இடையே பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் மூலமும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நிலக்கரி நீராவி என்ஜினை ரெயில்வே நிர்வாகம் சுற்றுலா பயணிகளுக்கு காட்சி பொருளாக வைக்க திட்டமிட்டது. இதன் பேரில் குன்னூர் ரெயில் நிலையம் முன்பு ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் நீராவி என்ஜின் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த என்ஜின் ரெயில் நிலையத்துக்கு வெளியே இருந்ததால், அதில் இருந்த பொருட்கள் திருடு போயின.

இதைத்தொடர்ந்து என்ஜினின் பாதுகாப்பு கருதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த என்ஜின் குன்னூர் ரெயில் நிலைய வளாகத்தில் லோகோ பணிமனைக்கு அருகில் இடமாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதன் பேரில் குன்னூர்–ஊட்டி ரெயில் பாதைக்கு அருகில் மேடை அமைக்கப்பட்டு தண்டவாளம் பொருத்தப்பட்டது.

இதனிடையே நீராவி என்ஜினை இடமாற்றம் செய்யும் பணி கடந்த 10–ந் தேதி தொடங்கப்பட்டது. ரெயில் நிலையத்துக்கு வெளியே இருந்து உள்ளே வரை தண்டவாளம் அமைக்கப்பட்டு சிறிது சிறிதாக 2–வது பிளாட்பாரம் வரை நீராவி என்ஜின் கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் டீசல் என்ஜின் மூலம் நீராவி என்ஜின் மேடைக்கு இழுத்து செல்லப்பட்டது. அங்கு ரெயில்வே ஊழியர்கள் நவீன தொழில்நுட்பம் மூலம் மேடையில் என்ஜினை ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ரெயில் என்ஜின் இடமாற்றம் செய்யப்பட்டதை ஆய்வு செய்வதற்காக தென்னக ரெயில்வே தலைமை மெக்கானிக்கல் என்ஜினீயர் ஏ.கே.கத்பால் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ரெயிலில் வந்தார். குன்னூர் வந்த அவர் மேடையில் நிறுத்தும் பணியை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் ரெயில்வே ஊழியர்களுக்கு பாதுகாப்பாக ரெயிலை மேடையின் மீது ஏற்றி நிறுத்தி வைப்பதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவருடன் ரெயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story