சம்பளம் வழங்காததை கண்டித்து புதுவை சாலை போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம்
சம்பளம் வழங்காததை கண்டித்து சாலை போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் 143 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பணிமனை தொழிலாளர்கள், ஊழியர்கள் என 650–க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். வழக்கமாக இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1 தேதியன்றே சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது நிதி பற்றாக்குறை காரணமாக சம்பளம் போடுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 5 மாதங்களாக சம்பளம் கேட்டு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாதம் 18 தேதியாகியும் சம்பளம் வழங்கப்படவில்லை. அதனையடுத்து ஊழியர்கள் சம்பளம் வழங்க கோரி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் இங்கு பணியாற்றி வருபவர்களில் நிரந்தர ஊழியர்கள் சிலருக்கு மட்டும் சம்பளம் போடப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் சம்பளம் வழங்காததை கண்டித்து ஒப்பந்த ஊழியர்கள் நேற்று காலை 10 மணியளவில் திடீரென வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் சம்பளம் வழங்கும்வரை பஸ்களை இயக்க மாட்டோம் என கூறி வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதனால் புதுவையில் இருந்து வெளியூர் செல்லும் பி.ஆர்.டி.சி. பஸ்கள் இயக்கப்படவில்லை. எனவே ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.