முத்திரையர்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; கவர்னர் கிரண்பெடி ஆய்வு


முத்திரையர்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; கவர்னர் கிரண்பெடி ஆய்வு
x
தினத்தந்தி 18 Nov 2017 10:15 PM GMT (Updated: 18 Nov 2017 8:48 PM GMT)

புதுச்சேரி முத்திரையர்பாளையம் பகுதியில் கவர்னர் கிரண்பெடி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று காலை முத்திரையர் பாளையம் பகுதிக்கு சென்றார். இதற்காக அவர் கவர்னர் மாளிகையில் இருந்து சைக்கிளில் சென்றார். அங்கு உள்ள வண்ணான்குளம் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு புதர் மண்டிக்கிடந்த குளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மழைநீர் அந்த குளத்திற்கு செல்லாத வகையில் இருந்த அடைப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வண்ணான்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களை சீரமைக்க நபார்டு, ஹட்கோ உள்ளிட்ட நிதி நிறுவனங்களை அணுகி பணம் பெற்று புதுப்பிக்க வேண்டும். இது குறித்து உள்ளாட்சி அமைப்புகள் அறிக்கை தயாரித்து நிதி நிறுவனங்களையும், மத்திய அரசையும் அணுக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பின்னர் அவர் கவர்னர் மாளிகைக்கு திரும்பினார். அப்போது காந்திநகர் பகுதி அருகே வந்த போது அங்கு சாலையை ஆக்கிரமித்து சிறு வியாபாரிகள் கடைகள் வைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளிடம் கேட்டார். அப்போது அதிகாரிகள் மார்க்கெட் வளாகம் திறக்கப்பட்டும் இங்கேயே வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்வதாக தெரிவித்தனர். அதே சமயம் வியாபாரிகள் மக்கள் அங்கு வராததால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து போலீசாரை அழைத்து உடனடியாக சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்பவர்களை மார்க்கெட் வளாகத்திற்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பின்னர் காந்தி நகர் மார்க்கெட் வளாகத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு, துப்புரவு பணிகளை சரியாக செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் அவர் கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

Next Story