வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்


வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Nov 2017 11:00 PM GMT (Updated: 18 Nov 2017 9:18 PM GMT)

அரியலூர் அருகே வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், மேலப்பழுவூரில் கீழப்பழுவூர் போலீசார் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். இதேபோல் நேற்று மேலப்பழுவூரை சேர்ந்த விவசாயிகள் 4 பேர் ஒன்றாக சேர்ந்து ஒரு சரக்கு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து கொண்டு வயலுக்கு உரங்கள் வாங்க கீழப்பழுவூருக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது, மேலப்பழுவூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சரக்கு ஆட்டோவில் மக்கள் பயணம் செய்யக்கூடாது எனக்கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த மேலப்பழுவூர் கிராம மக்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் திருச்சி-சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், மாணவர்களை பள்ளிக்கும், நோயாளிகளை மருத்துவமனைக்கும் அழைத்துச்செல்ல முடியவில்லை. வயல் வேலைக்கு இருசக்கர வாகனத்தில் செல்ல முடியவில்லை. வீட்டுக்கு உறவினர்கள் வந்தால் பஸ் நிறுத்தம் வந்து அவர்களை வழியனுப்ப முடியவில்லை. அனைவரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்வதாக குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த அரியலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சண்முகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் இனி பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமல் வாகனசோதனை நடைபெறும் என போலீசார் கூறியதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story