காலமுறை ஊதியம் அறிவிக்கக்கோரி கிராம உதவியாளர்கள் 29-ந்தேதி பட்டைநாமம் போட்டு ஆர்ப்பாட்டம்


காலமுறை ஊதியம் அறிவிக்கக்கோரி கிராம உதவியாளர்கள் 29-ந்தேதி பட்டைநாமம் போட்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Nov 2017 10:15 PM GMT (Updated: 18 Nov 2017 9:20 PM GMT)

காலமுறை ஊதியம் அறிவிக்கக்கோரி கிராம உதவியாளர்கள் வருகிற 29-ந்தேதி பட்டை நாமம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தஞ்சையில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தங்கராஜ் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ரூ.15,700 அடிப்படை ஊதியமாக கிராம உதவியாளர்களுக்கு வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான பொங்கல் போனஸ் ரூ.3 ஆயிரம் கிராம உதவியாளர்களுக்கு வழங்க வேண்டும்.

பதவி உயர்வு

அலுவலக உதவியாளர் பதவி உயர்வு பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்படவில்லை. அதை உடனடியாக வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படி மதுரை, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் உடனே வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 2016-17-ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்படவில்லை. அதை உடனே வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியும், அலுவலக உதவியாளர் பதவி உயர்வு 10 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியும் வழங்க வேண்டும்.

பட்டைநாமம்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29-ந்தேதி அனைத்து தாலுகா தலைநகரிலும் பட்டைநாமம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது. அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி மாவட்ட தலைநகரில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவது. மேலும் ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்தி ஊழியர்களை திரட்டுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில பொருளாளர் கோவிந்தன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, செந்தில்வடிவேலன், சிவரவிச்சந்திரன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story