திருவாரூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசார ரதம் கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்


திருவாரூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசார ரதம் கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Nov 2017 10:45 PM GMT (Updated: 18 Nov 2017 9:21 PM GMT)

திருவாரூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசார ரதத்தினை கலெக்டர் நிர்மல்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

திருவாரூர் ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு பிரசார ரத தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி விழிப்புணர்வு பிரசார ரதத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கைக்காக 22 மண்டல அளவிலான அலுவலர்கள் மற்றும் கள பணியாளர்கள் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி தேங்காய் மட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் மற்றும் உடைந்த மண்பாண்டங்கள் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் வீட்டு உபயோகத்திற்காக சேமித்து வைத்திருக்கும் குடிநீர் பானைகளை நன்கு மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கை

மேலும் வடகிழக்கு பருவமழையையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்கினால் உடனடியாக வெளியேற்றுதல், கொசு மருந்தடித்தல், நீர்த்தேக்க தொட்டிகளில் பிளிச்சிங் பவுடர் தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நியாய விலைக்கடைகளில் தேவையான குடிமை பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள் ளன. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் எந்தநேரமும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கின்ற வகையில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து குடியிருப்பு பகுதிகளில் கொசு உற்பத்தியாகாத வண்ணம், சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும். தங்கள் பகுதியில் ஏதெனும் நோய் அறிகுறி தென்பட்டால் தாமதிக்காமல் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையினை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ராஜசேகர், நகராட்சி ஆணையர் காந்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story