தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பணிக்கு திரும்பினார்கள்


தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பணிக்கு திரும்பினார்கள்
x
தினத்தந்தி 18 Nov 2017 11:15 PM GMT (Updated: 18 Nov 2017 11:15 PM GMT)

கர்நாடகத்தில் 5 நாட்களாக நடந்த போராட்டத்தை வாபஸ் பெற்றதால் நேற்று தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பணிக்கு திரும்பினார்கள்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் 5 நாட்களாக நடந்த போராட்டத்தை வாபஸ் பெற்றதால் நேற்று தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பணிக்கு திரும்பினார்கள்.

கர்நாடகத்தில் தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த மாநில அரசு புதிய சட்ட திருத்த மசோதா கொண்டுவந்துள்ளது. அந்த மசோதாவை பெலகாவி சுவர்ண சவுதாவில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆனால் அந்த திருத்த மசோதாவை நிறைவேற்ற கூடாது என்று வலியுறுத்தி தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கடந்த 13–ந் தேதியில் இருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கர்நாடகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன.

இதன் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். ஆனாலும் மாநிலம் முழுவதும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் 30–க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, நேற்று முன்தினம் பெலகாவி சுவர்ண சவுதாவில் முதல்–மந்திரி சித்தராமையாவுடன், இந்திய மருத்துவ சங்க கர்நாடக மாநில டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்த நிலையில், பெங்களூரு தவிர கர்நாடகத்தில் கடந்த 5 நாட்களாக மூடப்பட்டு இருந்த தனியார் மருத்துவமனைகள் நேற்று காலையிலேயே திறக்கப்பட்டன. மேலும் தனியார் டாக்டர்களும் வழக்கம் போல பணிக்கு திரும்பினார்கள்.

Next Story