சேலம் மணக்காட்டில் ரியல் எஸ்டேட் அதிபரின் கார் தீ வைத்து எரிப்பு? போலீசார் விசாரணை
சேலம் மணக்காட்டில் நள்ளிரவில் ரியல் எஸ்டேட் அதிபரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,
சேலம் மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 41). வக்கீலுக்கு படித்துள்ள இவர், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தனக்கு சொந்தமான காரை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். வீட்டிற்குள் விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தூக்கிக்கொண்டு இருந்தனர்.
இந்தநிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் இவரது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வீட்டின் கதவை திறந்து வெளியே வந்த அவர், கார் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றார். ஆனால், கார் என்ஜினில் பிடித்த தீ மளமளவென எரிந்ததால் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை.
இதையடுத்து நீண்ட நேரம் போராடி விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தீயை அணைத்தனர். அதற்குள் காரின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவலறிந்த அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விஜயகுமார் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவதால், தொழில் போட்டி காரணமாக அவரது காருக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்தனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதேசமயம், என்ஜினில் இருந்து தீ பரவியதா? என்பது குறித்தும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து, தீயில் எரிந்து கிடந்த காரின் சில பாகங்களை பரிசோதனை செய்வதற்காக எடுத்து சென்றனர். மேலும், மணக்காடு பகுதியில் அதிகாலை வேளையில் யாராவது சுற்றித்திரிந்தார்களா? என்பது குறித்தும் அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.