ஆசியாவிலேயே முதலீடு செய்ய உகந்த இடம் தமிழகம் வர்த்தக உச்சி மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


ஆசியாவிலேயே முதலீடு செய்ய உகந்த இடம் தமிழகம் வர்த்தக உச்சி மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 19 Nov 2017 11:15 PM GMT (Updated: 19 Nov 2017 10:09 PM GMT)

ஆசியாவிலேயே முதலீடு செய்ய உகந்த இடமாக தமிழகம் திகழ்வதாக சென்னையில் நடந்த வர்த்தக உச்சி மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

சென்னை,

ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டமைப்பின் வர்த்தக உச்சி மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று தமிழக அரசு சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.

இதேபோல ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டமைப்பின் தலைவர் அகமது ஏ.ஆர்.புஹாரி, இந்தியா மட்டும் இன்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான தொழில்முனைவோர்களும் பங்கேற்றனர்.

மாநாட்டில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஜவுளி, தோல், தானியங்கி மோட்டார் வாகனம் மற்றும் அதன் உதிரி பாகங்கள், கன மற்றும் இலகு ரக என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், அதுதொடர்பான சேவைகள், சுகாதாரம் என அதிக தொழிற்சாலைகளை கொண்ட முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் 3-வது பெரிய மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவதற்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.

அதில் ஒன்று தான் ‘தொலைநோக்கு திட்டம்-2023’. இதன்படி, அமல்படுத்துவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ள திட்டங்கள் முழுவீச்சில் செயல்படுத்தப்படும். புது கண்டுபிடிப்புகளில் தமிழகம் அறிவு மையமாக இருக்கிறது. இதனால் இந்திய அளவில் முதலீடு செய்ய சிறந்த இடமாகவும், ஆசியாவிலேயே முதலீடு செய்ய உகந்த முதல் 3 இடங்களில் ஒன்றாகவும் தமிழகம் இருக்கிறது. கொள்கைகள் மற்றும் உறுதிமொழிகளை காத்து சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொணரும் நீண்ட கால சாதனையை தமிழகம் உள்ளடக்கியது.

1991-ம் ஆண்டு தமிழகத்தில் தனி நபர் வருமானம் தேசிய அளவிலான சராசரியை விடவும் குறைவாக இருந்தது. இது தற்போது தேசிய சராசரியை விடவும் 80 சதவீதம் அதிகமாக இருக்கிறது. நாட்டிலேயே அதிக பொருளாதாரம் உடைய 2-வது மாநிலமாக தமிழகம் உள்ளது. உலகம் முன்னோக்கி நகருகையில், தமிழ்நாட்டில் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான வேகத்தை அதிகரிக்கவேண்டும் என்பதை நாங்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறோம்.

இதற்காக எங்களுடைய கொள்கை கட்டமைப்பை தொடர்ச்சியாக மேம்படுத்தி வருவதோடு, இரட்டிப்பான முயற்சிகளையும் அதற்காக அளித்து வருகிறோம். மின் துறையில் புரட்சியை கண்டு, மின் மிகை மாநிலமாக இருக்கிறது. இதற்கு ஜெயலலிதா தொடர்ச்சியாக எடுத்த நடவடிக்கைகளே காரணம். எதிர்காலத்தில் மின் பற்றாக்குறை இங்கு ஒருபோதும் ஏற்படக்கூடாது என்பதை இலக்காக கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கற்றறிந்த மற்றும் திறன்வாய்ந்த சிறந்த பணியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அதிக தொழிற்சாலைகளை கொண்ட தமிழகத்தில் அதன்மூலம் சுமார் 20 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். கடந்த 2014-15-ம் ஆண்டு 1 லட்சத்து 43 ஆயிரத்து 104 சிறு, குறு மற்றும் நடுத்தர அலகுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இது 2016-17-ம் ஆண்டில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 310 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 18 லட்சத்து 97 ஆயிரத்து 619 பேர் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.

முதலீட்டை பெருக்குவதற்காக தமிழகம் தொடர்ந்து கடுமையாக உழைக்கும். பொருளாதார மற்றும் வர்த்தக வழித்தடத்தை மேம்படுத்த பங்களிப்பு செய்திருக்கிறோம். சென்னை-பெங்களூரு வர்த்தக வழித்தடம் மற்றும் சென்னை-கன்னியாகுமரி பொருளாதார வழித்தடம் தொழில் மேம்பாடு மற்றும் கொள்கை துறையுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. மாநாட்டின் மூலம் ரூ.71 ஆயிரத்து 750 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதையும், ரூ.2 ஆயிரத்து 600 கோடி அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழகத்தில் செய்யப்படும் முதலீடுகள் மிகவும் பத்திரமானது. இது, கடின உழைப்பு மற்றும் துணிவுள்ள மக்களை நம்பி செய்யப்படுகிற முதலீடு. இங்கு உள்ள மனித வளங்களே மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றன. அதே மனித வளங்கள் உலக அரங்கில், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கும் பங்களித்து வருகின்றன. அதுமட்டுமின்றி, உலக அரங்கில் பல்வேறு தொழிற்சாலைகள், அமைப்புகள் மற்றும் சமூகங்களின் வளர்ச்சிக்கும் தமிழர்கள் பங்களிப்பு செய்துள்ளனர்.

வெளி மாநிலங்களில் இருந்து மட்டும் இன்றி, வெளிநாட்டில் இருந்தும் ஏராளமானோர் தமிழகத்துக்கு சுற்றுலா வருகின்றனர். மதிப்புமிக்க விருந்தாளியாக அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம். எங்களுடைய உற்சாக பயணத்தில் இணைந்து, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு கை கோர்க்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள். பகிர்ந்தளிக்கப்பட்ட எங்களுடைய எதிர்காலத்தில் முதலீடு செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story