கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்


கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
x
தினத்தந்தி 19 Nov 2017 11:00 PM GMT (Updated: 2017-11-20T03:39:06+05:30)

‘கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும்’ என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

கோவை வ.உ.சி.பூங்கா மைதானம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான சறுக்கு விளையாட்டு மைதானம் உள்ளது. அந்த மைதானம் ரூ.48 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச தரத்தில் செயற்கை தளத்துடன் அமைக்கப்பட்டுள்ள இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி புதுப்பிக்கப்பட்ட சறுக்கு விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

கோவையில் சறுக்கு விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக சர்வதேச தரத்தில் சறுக்கு விளையாட்டு மைதானம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. அடுத்து கோவையில் பிரமாண்டமான முறையில் கிரிக்கெட் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும். இதேபோல் கோவை ஆர்.எஸ்,.புரத்தில் ஆக்கி மைதானம் தயாராகி வருகிறது. அது விரைவில் திறக்கப்படும்.

கோவையில் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் சர்வதேச அளவில் கால்பந்து மைதானம் அமைய உள்ளது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

நிகழ்ச்சியில், தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ப.பாலகிருஷ்ண ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், எட்டிமடை சண்முகம், கலெக்டர் ஹரிகரன், மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் காந்திமதி, கோவை சறுக்கு விளையாட்டு சங்க தலைவர் ஏ.சுதாகரன், துணை தலைவர் டி.எஸ்.ஆர். அருண்பிரசாத், செயலாளர் சந்திரசேகர், தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சங்க தலைவர் கஸ்தூரிராஜ், செயலாளர் சொக்கலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சறுக்கு விளையாட்டு போட்டியை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். 

Next Story