பயிர் காப்பீடு தொகைக்கான மனுக்கள் பெறுவதில் தாமதம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்
ஆர்.எஸ்.மங்கலத்தில் வங்கியில் பயிர் காப்பீடு தொகைக்கான மனுக்கள் பெறுவதில் தாமதமானதை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் யூனியனுக்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர், சோழந்தூர் பகுதி விவசாயிகள் 2017–18ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் செலுத்தலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் பயிர் காப்பீட்டுக்கான தொகையை செலுத்தலாம் எனவும், வருகிற 25–ந்தேதிக்குள் இந்த தொகையை செலுத்தவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதைதொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள ஒரு வங்கிக்கு விவசாயிகள் அதிக அளவில் படையெடுத்தனர். அங்கு பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக காப்பீட்டு தொகைக்கான மனுக்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மாவட்ட கலெக்டரின் காரையும், அன்வர்ராஜா எம்.பி.யின் காரையும் விவசாயிகள் மறித்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து கலெக்டரும், எம்.பி.யும் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வங்கி மேலாளரை அழைத்து பேசினர். இதையடுத்து விவசாயிகளிடம் இருந்து பயிர் காப்பீட்டு மனுவை பெற விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.