ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தண்ணீர் தொட்டியில் கிடந்த நாய் உடல் போலீசார் விசாரணை


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தண்ணீர் தொட்டியில் கிடந்த நாய் உடல் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Nov 2017 10:45 PM GMT (Updated: 22 Nov 2017 7:20 PM GMT)

தா.பழூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் நாய் உடல் கிடந்தது. மேலும் மர்மநபர்களின் சதியா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த சிந்தாமணி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவி கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தின் அருகில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு, அதன்மூலம் மாணவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் வழக்கம்போல் பள்ளி திறக்கப்பட்டு பணியாளர்கள் பள்ளியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளிக்கு வந்திருந்த மாணவர்கள் சிலர் தண்ணீர் தொட்டிக்கு குடிநீர் குடிக்க சென்றனர். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியது. இந்த நாற்றத்தால் பள்ளிக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பு மக்கள் பள்ளி முன்பு கூடியதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவலறிந்த பள்ளியின் தலைமையாசிரியர் அமுதா அங்கு விரைந்து வந்து துப்புரவு பணியாளர்களை கொண்டு, தண்ணீர் தொட்டி யை திறந்து பார்த்தனர். அப்போது தண்ணீர் தொட்டியில் நாய் இறந்து கிடப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து தொட்டியில் இறந்து கிடந்த நாயின் உடலை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் தொட்டியை சோப்புகரைசல், பிளச்சிங் பவுடர் ஆகியவற்றை கொண்டு சுத்தம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் உதவி தொடக்க கல்வி அதிகாரி கலியபெருமாள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் விஜயா, தா.பழூர் வட்டார சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொட்டியை ஆய்வு செய்தனர். இதுகுறித்து கல்வி அதிகாரிகள் தெரிவித்த தாவது:-

தண்ணீர் தொட்டியில் நாய் விழுவதற்கு வாய்ப்புகள் குறைவு. யாரோ மர்ம நபர்கள் செய்த சதிவேலையாக இருக்க லாம். இதுகுறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு மாற்று இடத்தில் இருந்து சுகாதாரமான குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் தொட்டியை சுமார் 10 நாட்கள் வரை தொடர்ந்து சுத்தம் செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது. தண்ணீர் தொட்டியில் சுகாதாரம் உறுதி செய்யும் வரை அதிலிருந்து குடிநீர் வினியோகிக்கப் படமாட்டாது. எனவே பொதுமக்கள், மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றனர். 

Next Story