சர்க்கரை விலை உயர்வை கண்டித்து 589 ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சர்க்கரை விலை உயர்வை கண்டித்து 589 ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2017 11:00 PM GMT (Updated: 2017-11-23T01:35:37+05:30)

சர்க்கரை விலை உயர்வை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் 589 ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை விலையை உயர்த்தி தமிழகஅரசை கண்டித்தும், விலை உயர்வை ரத்து செய்ய கோரியும், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நியாயவிலைக்கடைகளில் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், பொதுவினியோகத்திட்டத்தில் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியங்களை ரத்து செய்யும் போக்கை மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பதை வற்புறுத்தியும் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சை மாவட்டத்தில் 914 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் 589 ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை வடக்குவீதியில் உள்ள ரேஷன் கடை முன்பு மாநகர தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் நீலமேகம் முன்னிலை வகித்தார்.

இதில் தி.மு.க. நிர்வாகிகள் மேத்தா, சுல்தான்பாபு, சந்திரன், தர்மராஜ், மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் வாசு, பட்டதாரி அணி மாநில தலைவர் லட்சுமிநாராயணன், பொருளாளர் பழனியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை கூட்டுறவு காலனியில் உள்ள ரேஷன் கடை முன்பு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன் தலைமையில் மாநில விவசாய அணி செயலாளர் ஜித்து முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் உள்ள ரேஷன் கடை முன்பு ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஒன்றிய செயலாளர் அருளானந்தசாமி முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருவிடைமருதூரில் உள்ள ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோவி.செழியன் எம்.எல்.ஏ.வும், கும்பகோணத்தில் உள்ள ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ.வும் கலந்து கொண்டனர். தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டையில் உள்ள ரேஷன் கடை முன்பு கிளை செயலாளர்கள் கோவிந்தராஜ், பாலு ஆகியோர் தலைமையில் பிரதிநிதி சக்தி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story