மாவட்டத்தில் ஏரிகளில் உள்ள 2,383 ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை அதிகாரி தகவல்


மாவட்டத்தில் ஏரிகளில் உள்ள 2,383 ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 24 Nov 2017 4:30 AM IST (Updated: 24 Nov 2017 12:48 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் ஏரிகளில் உள்ள 2,383 ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் எத்திராஜ் தெரிவித்தார்.

கடலூர்,

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையொட்டி கடலூர் நகரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சின்னவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. நேற்று இம்பீரியல் சாலையையொட்டி சின்னவாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த பணியை சப்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டார். அப்போது தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேப்போல் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மற்ற நீர்நிலைகள் மற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது? என்று கடலூர் மாவட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் எத்திராஜிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 228 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் 4 ஆயிரத்து 94 இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. அவற்றில் 1,711 இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளோம். மேலும் 2 ஆயிரத்து 383 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பெருமழையின் போது ஒரேநாளில் 45 செ.மீ. மழை பெய்ததால் கெடிலம் ஆற்றில் அதிகபட்சமாக வினாடிக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாய்ந்தோடியதால் கடலூர் நகருக்குள் வெள்ளம் புகுந்தது. இனிமேல் இதுபோன்ற பெருமழை பெய்தால், நகருக்குள் வெள்ளம் புகாதபடி தடுக்க கெடிலம் ஆற்றங்கரையை உயர்த்தி பலப்படுத்தும் பணிகளை நபார்டு திட்டத்தின் கீழ் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்து வருகிறோம். எனவே இனிமேல் கெடிலம் ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் ஓடினாலும் கரையை தாண்டி வெள்ளம் நகருக்குள் வராது.

வடகிழக்கு பருவமழையால் மாவட்டத்தில் உள்ள 228 ஏரிகளில் 63 ஏரிகள் 100 சதவீதமும், 48 ஏரிகளில் 75 முதல் 100 சதவீதமும், 37 ஏரிகளில் 50 முதல் 75 சதவீதமும், 36 ஏரிகளில் 25 முதல் 50 சதவீதமும், 44 ஏரிகளில் 25 சதவீதமும் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளது.

கடலூர் மாவட்டம் கடல் மட்டத்தை விட 5 அடி தாழ்வாக உள்ளதால், கடல் நீர் ஊடுருவல் அதிகமாக காணப்படுகிறது. ஆற்றுப்பகுதிகளில் 15 முதல் 18 கிலோ மீட்டர் தொலைவு வரை கடல் நீர் ஊடுருவி உள்ளது. பிச்சாவரம் பகுதியில் உப்பனாற்றில் கடல் நீர் ஊடுருவலை தடுக்க 10 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டுவதற்காக திட்டமதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு கண்காணிப்பு பொறியாளர் எத்திராஜ் தெரிவித்தார். 

Next Story