காங்கிரஸ் அரசின் திட்டங்களை மக்கள் விரும்புகிறார்கள் சட்டசபையில் முதல்–மந்திரி சித்தராமையா பேச்சு


காங்கிரஸ் அரசின் திட்டங்களை மக்கள் விரும்புகிறார்கள் சட்டசபையில் முதல்–மந்திரி சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 24 Nov 2017 3:00 AM IST (Updated: 24 Nov 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் அரசின் திட்டங்களை மக்கள் விரும்புகிறார்கள் என்று சட்டசபையில் முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

பெலகாவி,

காங்கிரஸ் அரசின் திட்டங்களை மக்கள் விரும்புகிறார்கள் என்று சட்டசபையில் முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

காங்கிரஸ் திட்டங்களை விரும்புகிறார்கள்

கர்நாடக சட்டசபையில் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி சுவர்ண சவுதாவில் கடந்த 13–ந் தேதி தொடங்கியது. நேற்று 9–வது நாள் கூட்டம் காலை 11 மணியளவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் வட கர்நாடக மாவட்டங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடந்தது. அப்போது முதல்–மந்திரி பேசும்போது கூறியதாவது:–

எனது(சித்தராமையா) தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு முதல் முறையாக இங்கு கூட்டம் நடத்தப்பட்டபோது ஏராளமான மக்களைக் கண்டேன். அவர்கள் கூட்டம் நடந்த ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து சுவர்ண சவுதா முன்பு ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டார்கள். ஆனால் இப்போது அப்படி யாரும் இல்லை. இதன்மூலம் பெரும்பான்மையான மக்கள் காங்கிரஸ் அரசின் திட்டங்களை விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது.

வெறுப்புணர்வை சம்பாதிக்கவில்லை

மக்களின் தேவைகளையும், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் நியாயமாகவும், நேர்மையுடனும் காங்கிரஸ் பூர்த்தி செய்து வருகிறது. அடுத்த ஆண்டு(2018) கர்நாடகத்தில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அரசும் பதவி ஏற்று 3 ஆண்டுகளுக்கு பிறகு மக்களிடையே வெறுப்புணர்வையும், எதிர்மறையான கருத்துக்களையும் சம்பாதிக்க ஆரம்பித்துவிடும்.

ஆனால் எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளையும் முழுவதுமாக பூர்த்தி செய்து உள்ளது. ஆனால் இதுவரை மக்களிடம் இருந்து எதிர்மறையான கருத்துகளையும், வெறுப்புணர்வையும் காங்கிரஸ் சம்பாதிக்கவில்லை. இதன்மூலம் மக்கள் காங்கிரஸ் அரசை வரவேற்கிறார்கள் என்று உறுதியாகி உள்ளது.

சுமுக தீர்வு காண முடியும்

பிற்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் கர்நாடகம்–மராட்டிய மாநில எல்லையில் வசிக்கும் மக்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக காங்கிரஸ் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. மகதாயி நதிநீர் பங்கீட்டு பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. இதுதொடர்பாக நான் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முறையிடுவேன். பிரதமர் தலையிட்டால் மட்டுமே மகதாயி நதிநீர் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story