சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் நூதன போராட்டம்
காங்கேயன்பேட்டையில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவிடைமருதூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது காங்கேயன்பேட்டை கிராமம். திருபுவனம் பேரூராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் உள்ள சாலை 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி காங்கேயன்பேட்டை கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நேற்று சாலையில் வாழை மரக்கன்றுகள் நடும் நூதன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜீவபாரதி தலைமை தாங்கினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு சாலையில் வாழை மரக்கன்றுகளை நட்டு, திருபுவனம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் திருவிடைமருதூர் தாசில்தார் ராஜேஸ்வரி, பேரூராட்சி நிர்வாக அதிகாரி திருமூர்த்தி, போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.