என்.ஆர்.காங்கிரசை பலப்படுத்த ரங்கசாமி அதிரடி திட்டம் மாநாடு நடத்த முடிவு
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த முதல்–அமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளார். இதையொட்டி வருகிற பிப்ரவரி மாதம் மாநில மாநாடு நடத்த அவர் ஏற்பாடுகள் செய்து வருவதாக தெரிகிறது.
புதுச்சேரி,
காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ரங்கசாமி கடந்த 2011–ம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். அதே ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியையும் பிடித்தார். தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். இந்தநிலையில் கடந்த 2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. அந்த கட்சி சார்பில் போட்டியிட்டவர்களில் 8 பேர் மட்டுமே எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றனர்.
இதன்பின் அதிரடி அரசியலில் இறங்காமல் ரங்கசாமி மவுனம் காத்து வந்தார். கட்சியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படாதது, இலவச அரிசி, உதவித்தொகை, மாணவர்களுக்கு கல்வி உதவி போன்றவை நிறுத்தி வைப்பு போன்ற மக்கள் தொடர்பான பொதுப்பிரச்சினைகளில் குரல் கொடுக்காதது போன்றவற்றால் கட்சி நிர்வாகிகளிடையே சோர்வு ஏற்பட்டது.
இந்தநிலையில் வருகிற 2019–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி சேரும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ரங்கசாமி ஈடுபட்டுள்ளார். அதன் முதல்கட்டமாக பொதுச்செயலாளர் பாலன் தலைமையில் மாவட்டம், தொகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணிகள் ஓசையின்றி நடந்து வருகிறது.
ஆன்மிகத்தில் நாட்டமுடைய ரங்கசாமி சனிப்பெயர்ச்சிக்கு பின்னர் கட்சி நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளார். குறிப்பாக கட்சியின் தலைமை அலுவலகத்தை இடமாற்றம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது 100 அடி ரோட்டில் செயல்படும் அலுவலகம் காலி செய்யப்பட்டு அதே பகுதியில் மற்றொரு இடத்தில் அலுவலகம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கட்சி தொடங்கிய ஆண்டில் ரோடியர் மில் திடலில் ரங்கசாமி பிரம்மாண்ட மாநாட்டை நடத்தினார். அதேபோல் வருகிற பிப்ரவரி மாதமும் ரோடியர் மில் திடலில் மீண்டும் ஒருமுறை மாநாடு நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.