மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை 2 பேர் கைது


மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Dec 2017 3:45 AM IST (Updated: 1 Dec 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

மசாஜ் சென்டரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்துச்சென்ற 2 பேர் கைதானார்கள். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவை சேதராப்பட்டு மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது29). இவர் தட்டாஞ்சாவடி வி.வி.பி.நகர் பகுதியில் மசாஜ் சென்டர், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வருகிறார். இங்கு பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இவருடைய மசாஜ் சென்டருக்கு கடந்த 28–ந் தேதியன்று இரவு 5 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. அவர்கள் சுரேந்தரிடம் கத்தியை காட்டி மிரட்டி, கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.8 ஆயிரம், அங்கு இருந்த ஆண், பெண் ஊழியர்களிடம் செல்போன்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர். மேலும் ஒவ்வொரு மாதமும் ரூ.15 ஆயிரம் மாமூல் தர வேண்டும் எனவும் மிரட்டி விட்டுச் சென்றனர்.

இதுகுறித்து கோரிமேடு போலீஸ் நிலையத்தில் சுரேந்தர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் முத்திரையர்பாளையம் முனுசாமி (25), குண்டுப்பாளையம் மணிகண்டன் (24) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6,500 ரொக்கம், 5 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

முனுசாமியின் கூட்டாளிகளான கல்மேடுபேட் பகுதியை சேர்ந்த வெங்கட், தட்டாஞ்சாவடி பிரசாத், எல்லைப்பிள்ளைச்சாவடி அருண் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story