மதுரை ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று கரும்புக்கான நிலுவைத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும்; பி.ஆர்.பாண்டியன்
மதுரை ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று கரும்புக்கான நிலுவைத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
தஞ்சாவூர்,
தமிழக காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் துரைபாஸ்கரன் முன்னிலை வகித்தார். மண்டல தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். இதில் மாவட்ட கவுரவ தலைவர் திருப்பதி வாண்டையார், மாநில துணைச் செயலாளர் மணி, வடக்கு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, செயலாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:–
அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு கடந்த 2015–16, 2016–17–ம் நிதி ஆண்டுகளில் 6 லட்சம் டன் கரும்புகளை அரவைக்காக விவசாயிகள் அனுப்பி வைத்துள்ளனர். அரசாணைகளின்படி விவசாயிகள் வினியோகித்த கரும்புக்கு டன்னுக்கு ரூ.450 பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.27½ கோடியை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று எங்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைபாஸ்கரன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, கரும்புக்கான நிலுவைத் தொகையை 2 மாதத்தில் சர்க்கரை ஆலை நிர்வாகமும், தமிழகஅரசும் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்த தீர்ப்பு தீர்வை தரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஐகோர்ட்டின் உத்தரவை ஏற்று கரும்புக்கான நிலுவைத் தொகையை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க வேண்டும். தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தால் அது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம். இதை எதிர்த்து அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம். சம்பா சாகுபடிக்காக அக்டோபர் மாதம் தான் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் 18 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றுள்ளது. பயிர்களை காக்க பிப்ரவரி மாத இறுதிவரை தண்ணீர் வழங்க வேண்டும்.
ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதத்திற்கான 63 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று தமிழகஅரசு அவசர வழக்காக தாக்கல் செய்த மனுவை சுப்ரீம்கோர்ட்டு நிராகரித்துள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி கர்நாடகஅரசிடம் பேசி தமிழகத்திற்குரிய 63 டி.எம்.சி. தண்ணீரை பெற்று தந்து விவசாயிகளை காக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.