கோவை பிரஸ்காலனியில் உள்ள அச்சகத்தை மூடாமல் விரிவுபடுத்த வேண்டும் வைகோ கோரிக்கை
கோவையை அடுத்த பிரஸ்காலனியில் உள்ள அச்சகத்தை மூடாமல் விரிவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இடிகரை,
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரஸ்காலனியில் மத்திய அரசின் அச்சகம் இயங்கி வருகிறது. இந்த அச்சகத்தில் தபால்துறையில் பயன்படுத்தும் கடிதங்கள், கார்டுகள், ஏர்போர்ஸ், ஊட்டி வெலிங்டன் ராணுவ முகாமுக்கு தேவையான கடிதங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் துறை சார்ந்த அனைத்து விண்ணப்பங்களும் அச்சடிக்கப்படுகின்றன. இந்த நிலையில் இந்த அச்சகத்தை மூடுவதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கையெழுத்து இயக்கம், மனித சங்கலி என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பிரஸ்காலனி இந்திய அச்சகம் முன்பு அச்சக ஊழியர்கள் சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் நடந்தது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
கோவை பிரஸ்காலனியில் உள்ள இந்திய அரசின் அச்சகம் ஆண்டுக்கு ரூ.1½ கோடி வரை லாபம் ஈட்டி வருகிறது. இந்த அச்சகத்தை மூடிவிட்டு மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள அச்சகத்துக்கு மாற்றம் செய்யப்படுவது என்ற மத்திய அரசின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் இங்கு பயிற்சி பெறும் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும். இதனால் நிறையபேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
எனவே இந்த அச்சகத்தை மூடும் முடிவை மத்திய அரசு மாற்றிக்கொண்டு அச்சகத்தை விரிவுபடுத்த வேண்டும். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சம்பந்தப்பட்ட துறை மந்திரிக்கு நான் கடிதம் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் தகவல் தெரிவிப்பேன்.
இதுதவிர கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தையும் மூடுவிட்டு, வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்லவும், கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தை மூடவும் மத்திய அரசு நினைக்கிறது. எனவே இந்த முடிவையும் மத்திய அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ம.தி.மு.க. அவைத்தலைவர் துரைசாமி, மாவட்ட செயலாளர்கள் மாரியப்பன், மோகன் குமார், மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன், ஆடிட்டர் அர்ஜூன், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, கோவை மாவட்ட மத்திய அரசு ஊழியர்களின் சம்மேளன ஒருங்கிணைப்பாளர் குழுத்தலைவர் விஜயன், மத்திய அரசின் அச்சக ஊழியர் சங்க தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.