திருச்செந்தூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளியை கொன்ற மகன் மரம் விற்ற பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு


திருச்செந்தூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளியை கொன்ற மகன் மரம் விற்ற பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு
x
தினத்தந்தி 3 Dec 2017 2:15 AM IST (Updated: 2 Dec 2017 6:51 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கூலி தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த ராணிமகராஜபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 67). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பேச்சியம்மாள் (60). இவர்களுக்கு ஆறுமுகபாண்டியன் (45), ரமேஷ், ஞானப்பழம் ஆகிய 3 மகன்களும், ஜெயகனி, மாலதி, கீதா ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இளைய மகன் ஞானப்பழம் தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

மூத்த மகன் ஆறுமுகபாண்டியன், இளைய மகன் ஞானப்பழம் ஆகிய 2 பேரும் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள பேன்சி கடையில் ஊழியர்களாக வேலை செய்து வந்தனர். 2–வது மகன் ரமேஷ், சென்னையில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். ஆறுமுகபாண்டியன் தனது தந்தையின் நிலத்தில் இருந்த வேப்ப மரத்தை வெட்டி அகற்றி விட்டு, அதில் புதிய வீடு கட்டும் பணியை தொடங்கினார்.

தகராறு

இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கவேல் தன்னுடைய மூத்த மகன் ஆறுமுகபாண்டியனிடம் வேப்ப மரத்தை வெட்டி விற்ற பணத்தில் தனக்கு பங்கு தருமாறு கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆறுமுகபாண்டியன் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

இதற்கிடையே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பேச்சியம்மாளை பார்ப்பதற்காக ரமேஷ் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் ரமேஷ், தங்கவேல் ஆகிய இருவரும் சேர்ந்து ஆறுமுகபாண்டியனின் மனைவி ஆனந்தியிடம் தகராறு செய்து, அவரை தாக்கினர். இதில் காயம் அடைந்த ஆனந்தி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கல்லால் தாக்கி...

இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகபாண்டியன் இரவில் வீட்டுக்கு வந்ததும், தன்னுடைய தந்தை தங்கவேலை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்தார். பின்னர் அவரை கல்லால் தாக்கியும், காலால் மிதித்தும், சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த தங்கவேலை சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே தங்கவேல் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஆறுமுகபாண்டியனை வலைவீசி தேடி வருகிறார். தந்தையை மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story