உடுமலை அரசு ஆஸ்பத்திரி மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்; அமைச்சர் விஜயபாஸ்கர்
உடுமலை அரசு ஆஸ்பத்திரி மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
மடத்துக்குளம்,
உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர். அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை விரைவாக கண்டறியும் கருவியை பார்வையிட்டார். மேலும் அறுவை சிகிச்சைப்பிரிவு, இருதய அறுவை சிகிச்சை பிரிவு, பொது மருத்துவ பிரிவு, மகப்பேறு பிரிவு உள்ளிட்ட ஆஸ்பத்திரியின் பெரும்பாலான பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் செவிலியர்களிடம் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகள்,சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அத்துடன் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:–
இந்த ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவத்துறைக்கென ரூ.13 கோடியே 8 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பூரில் உள்ள மாவட்டத்தலைமை மருத்துவமனைக்கு ரூ.5 கோடி செலவில் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவி வாங்கப்பட்டுள்ளது. உடுமலையில் அரசு ஆஸ்பத்திரி தாலுகா மருத்துவமனையாக இருந்த போதிலும் தினசரி 1500–க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
மேலும் மாதத்திற்கு 140 பிரசவங்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது. மிகச்சிறப்பான மகப்பேறு சிகிச்சை தமிழகத்தில் வழங்கப்படுவதால் தாய்–சேய் இறப்பு விகிதம் பாதியாக குறைந்துள்ளது. இதில் இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
மேலும் விரைவில் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் கருவி வழங்கப்படும். அதோடு 100 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்ற அமைச்சர் ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் ஆகியோரின் வேண்டுகோளும் விரைவில் உடுமலை அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனை என்ற நிலையில் இருந்து மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அத்துடன் மடத்துக்குளம் தாலுகா மருத்துவமனையில் புதிதாகக்கட்டுப்பட்டுள்ள கட்டிடத்துக்கு நிதி ஒதுக்கி விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
முன்னதாக குடிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை கண்டறியும் கருவியை ஆய்வு செய்தார். பின்னர் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பரிசு பொருட்களை அமைச்சர் வழங்கினார். ஆய்வின் போது பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி, உடுமலை ஆர்.டி.ஓ.அசோகன், திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் சவுந்திரராஜன், துணை இயக்குனர் ஜெயந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.