“கடலில் மாயமானவர்களை மீட்டு தாருங்கள்” குளச்சலில் அமைச்சர்களை முற்றுகையிட்டு மீனவர்கள் உருக்கமான கோரிக்கை


“கடலில் மாயமானவர்களை மீட்டு தாருங்கள்” குளச்சலில் அமைச்சர்களை முற்றுகையிட்டு மீனவர்கள் உருக்கமான கோரிக்கை
x
தினத்தந்தி 2 Dec 2017 11:15 PM GMT (Updated: 2 Dec 2017 8:18 PM GMT)

குளச்சலில், அமைச்சர்களை முற்றுகையிட்ட மீனவர்கள், கடலில் மாயமானவர்களை மீட்டு தாருங்கள் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்தனர்.

குளச்சல்,

ஒகி புயல் காரணமாக பெய்த கன மழையால் குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி ஆகியோர் பார்வையிட்டு, நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்கள்.

அதன்படி அவர்கள் நேற்று குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தை பார்வையிட வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த மீனவர்கள் அமைச்சர்களை முற்றுகையிட்டு, குளச்சலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்று மாயமான 3 மீனவர்களையும் மீட்டு தர வேண்டும் என்று உருக்கமான கோரிக்கை வைத்தனர். மேலும் மீனவர்களை துரிதமாக கண்டு பிடிக்க நவீன படகும், தகவல் பரிமாற்ற வசதியும் செய்ய வேண்டும். மாயமான மீனவர்களை கண்டு பிடிக்க கடலோர காவல் படையினர் விரைந்து செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்கள்.

அப்போது அங்கு மீனவர்களுடன் பங்குத்தந்தை எட்வின் வின்சென்ட் மற்றும் சர்ச் நிர்வாகிகள், விசைப்படகு சங்கத்தினர் உடன் இருந்தனர். அவர்களிடம் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் உறுதி அளித்தனர். அதை மீனவர்கள் ஏற்று அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதைத்தொடர்ந்து குளச்சலில் மாயமான 3 மீனவர்களின் வீடுகளுக்கு அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி ஆகியோர் சென்றனர். மீனவர்களின் குடும்பத்தினருக்கு அவர்கள் ஆறுதல் கூறினார்கள்.

அப்போது உடன் இருந்த விஜயகுமார் எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, “எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடியில் நவீன மீட்பு படகு விரைவில் வாங்கப்படும்” என குறிப்பிட்டார்.

அமைச்சர்களுடன் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ மற்றும் அதிகாரிகள் வந்து இருந்தனர்.

முன்னதாக கடியப்பட்டணத்துக்கு சென்ற அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர். அதன்பிறகு முட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கிருந்து விசைப்படகில் கடலில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தூண்டில் வளைவு சேதமடைந்த பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.


Next Story